விழுப்புரம்: ஒட்டனந்தல் கிராம பஞ்சாயத்தில் தலித் முதியவர்களை காலில் விழ வைத்த 2 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் தலித் முதியவர்களை பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது ஒட்டனந்தல். இக் கிராமத்தில் தலித் சமூகத்தினர் அண்மையில் திருவிழாவை நடத்தினர்.

திருவிழாவுக்கு எதிர்ப்பு
ஆனால் இன்னொரு ஜாதியினரோ தங்களுடைய அனுமதி பெறாமல் தலித் மக்கள் எப்படி திருவிழா நடத்தலாம்? என கேள்வி எழுப்பினர். அத்துடன் இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்தனர்.

ஜாதி பஞ்சாயத்து கூட்டம்
அங்கு வந்த போலீசார் தலித் மக்கள் திருவிழாவுக்காக கட்டி இருந்த ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர். இதனிடையே தங்களது அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியது குற்றம் என கூறி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த இன்னொரு ஜாதியினர் பஞ்சாயத்தை கூட்டினர்.

தலித்துகளை காலில் விழ வைத்தனர்
இந்த பஞ்சாயத்தில் திருவிழா நடத்தியதால் அதை முன்னின்று நடத்தியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானித்தனர். இதனை ஏற்று தலித் பெரியவர்களும் இன்னொரு ஜாதியினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

காலில் விழ வைத்ததால் சர்ச்சை
இப்படி அப்பட்டமாக ஜாதிவெறி பஞ்சாயத்து நடத்தி சக மனிதர்களை காலில் விழ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

2 பேரை கைது செய்த போலீஸ்
இதனையடுத்து ஜாதிவெறி பஞ்சாயத்தை கூட்டி தலித் பெரியவர்களை மன்னிப்பு கேட்க வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications