வந்தே பாரத் ரயில் விழுப்புரம் கிட்ட ஷாக்.. காதலிக்காக விக்கி செய்த வேலை.. C4 பெட்டியில் என்ன சத்தம்
சென்னை: சென்னையில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய 22 வயது இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் விழுப்புரம் அருகே நிகழ்ந்துள்ளதோடு, அந்த இளைஞர் அளித்த வாக்குமூலம் காவல் துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மாலை வழக்கம்போல சென்னை எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், விழுப்புரம் மாவட்டப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

வந்தே பாரத் சி-4 பெட்டி
குறிப்பாக, விழுப்புரம் மற்றும் தச்சூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றபோது, தண்டவாளம் அருகே மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ரயிலை நோக்கி சரமாரியாகக் கற்களை வீசினார். இதில் ஒரு கல் பலத்த சத்தத்துடன் ரயிலின் சி-4 (C-4) பெட்டியின் ஜன்னல் கண்ணாடியைத் தாக்கியது.
கற்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து விழுந்து கொண்டேயிருந்தது.. தாக்குதலின் வேகத்தில் ஜன்னல் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. அந்த நேரத்தில், அந்தப் பெட்டியில் ஏராளமான பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள்..
கண்ணாடி உடைந்த சத்தத்தைக் கேட்டு பயணிகள் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினார்கள்.. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் உடல் ரீதியான காயம் ஏற்படவில்லை. ரயிலின் உட்புறம் பாதுகாப்பு அடுக்குகள் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக ரயில் டிரைவருக்கும் ரயில்வே கன்ட்ரோல் ரூமுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் வந்தே பாரத்
அப்போதுதான் கல்வீச்சு நடத்தப்பட்ட தச்சூர் பகுதிக்கு அருகே உள்ள தண்டவாளப் பாதையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு இளைஞர் சுற்றித் திரிவதைப் போலீசார் கண்டறிந்தனர். உடனே அவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்..
அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கி (22) என்பது தெரியவந்தது. ஆனால் போலீசார் விசாரித்ததில் இருந்தே முன்னுக்குப் பின் முரணாகப் பேசி கொண்டிருந்தார்.. பிறகு போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் ரயிலின் மீது கல் வீசியதை விக்கி ஒப்புக்கொண்டார். விக்கி போலீசாரிடம் தந்த வாக்குமூலம் அதற்குமேல் அதிர்ச்சியை தந்துவிட்டது.
விக்கி செய்த காரியம்
அதாவது விக்கி ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்து வந்தாராம்.. ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் விக்கியை பிரிந்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் விக்கி., ஒரு கட்டத்தில் தனது ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துள்ளார். தனது ஆத்திரத்தை எப்படியாவது தீர்த்துக் கொள்ளவும், மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கவும் ஏதேனும் ஒரு விபரீதச் செயலைச் செய்ய முடிவெடுத்தார் விக்கி..
இதற்காக ரயில் தண்டவாளம் அருகே வந்துள்ளார்.. அந்த நேரத்தில்தான், மின்னல் வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயிலைப் பார்த்ததும், தன் கையில் இருந்த கற்களை ஆவேசத்துடன் அதன் மீது வீசினாராம்.. இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக விக்கி சொன்னார்.
ரயில்வே போலீஸ் வார்னிங்
இதையடுத்து விக்கி மீது ரயில்வே சட்டத்தின் கீழ் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் (Section 151), பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் (Section 154) உள்ளிட்ட பல்வேறு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது... ஆனால் ஒரு தனிப்பட்ட காதல் தோல்வி, பொதுச் சொத்துக்களுக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் முடிந்திருப்பது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது...!!












Click it and Unblock the Notifications