பட்டா மாற்றம் செய்ய போனவருக்கு ஷாக் கொடுத்த விஏஓ.. விழுப்புரம் தொழிலாளி செய்த சூப்பர் சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு கட்டிட தொழிலாளியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தபோது அதனை வாங்கிய விஏஓ மற்றும் நில அளவையரை கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது சட்டப்படி குற்றமாகும். எனினும் இதனை மீறி சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ஆனாலும் இன்னும் சில கிராமங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் நாம் கூறும் வேலையை செய்து முடிப்பதாக கூறுகிறார்கள்.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்
ஒட்டுமொத்தமாக எல்லா அதிகாரிகளும் இப்படி செயல்படாவிட்டாலும் ஒரு சில அதிகாரிகளால் அரசுத் துறைக்கே அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. பல அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கிக்கொண்டதை பார்த்த பின்னரும் இதுபோன்ற செயல்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தான் விழுப்புரம் அருகே பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே நரையூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ராஜூ (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு காலிமனை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பார்த்த போது பட்டா அவரது பெயருக்கு மாறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதற்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய அவரது கிராம விஏஓ ஆபிசிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று இருக்கிறார்.
ரூ.3,000 லஞ்சம் கேட்டனர்
அங்கு நரையூர் கிராம உதவியாளர் கிருஷ்ணன் (54) மற்றும் வளவனூர் நில அளவையர் ஸ்டாலின் (27) இருந்துள்ளனர். அப்போது ராஜூ விவரத்தை கூறியிருக்கிறார். இதில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்றால் ரூ.3,500 தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். இதற்கு ராஜூ ரூ.3000 தருவதாக கூறியிருக்கிறார். சரி நாளைக்கு பணத்தை கொண்டு வாங்க.. வேலையை ஆரம்பித்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கையும் களவுமாக சிக்கினர்
அதன்பேரில் அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு இது தொடர்பாக ராஜூ லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ மற்றும் நில அளவையரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி தொழிலாளி ராஜூவிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகம் சென்ற ராஜூ பணத்தை நில அளவையர் ஸ்டாலின் மற்றும் விஏஓ கிருஷ்ணனிடம் கொடுத்தார்.
அப்போது அவர்கள் அந்த பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பட்டா மாற்றம் செய்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் மற்றும் விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications