தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்.. திராவிடர் கழக தலைவர் வீரமணி வலியுறுத்தல்!
விழுப்புரம்: அரசு வேலைகளை காட்டிலும் தனியார் பணிகள் அதிகரித்துள்ள நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் இன்று திராவிடர் கழகத்தின் மாநில குழுக்கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது. இன்றும் கூட, நந்தனர் நுழைந்த வாயிலை அடைத்து வைத்திருக்கின்றனர். எனவே, இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.
அதேபோல பழனி முருகன் கோயிலிலும் சில சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அக்கோயிலின் அர்ச்சகர்களாக பண்டாரத்தார்களை மீண்டும் நியமிக்க வேண்டும். திருக்கோயில் விஷயங்களில் திமுக ஆட்சியில் மிகப்பெரிய புரட்சி நடந்திருக்கிறது. குறிப்பாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது திமுக ஆட்சியில்தான். இதுதான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை வெளியில் எடுத்திருக்கிறது.
நமது மாநிலம் எல்லாவற்றிலும் முன்னனியில் இருந்தாலும் கூட மத்திய அரசு நமக்கு நிதியை கொடுக்க மறுத்து வருகிறது. கல்வியிலும் சரி, தொழில் வளர்ச்சியிலும் சரி தமிழகம் முதலில் இருக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசே கூறியிருக்கிறது. இருப்பினும் நமக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. பேரிடர் நிதியாகட்டும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியாகட்டும், விடுவிக்கப்படாமல் இருப்பதால் தமிழக அரசு தள்ளாடுகிறது.
போதுமான நிதி இல்லாததால் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. ஆனால், பாஜகவினரோ, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பிரசாரத்தை முன்னெடுத்து செல்கிறது. நம்முடைய மாநிலம் அதிக வரியை செலுத்துகிறது. இருப்பினும், ஆந்திராவுக்கும் பீகாருக்கும் மத்திய அரசு நிதியை ஒதுக்கி வருகிறது. இதன் பின்னால் அரசியல் காரணம் இருக்கிறது. மைனாரிட்டி பாஜகவை இந்த மாநில அரசுகள்தான் காப்பாற்றுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு அதானிக்கும், அம்பானிக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களில்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. எனவே தனியார் துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும். இதற்காக தேசிய அளவில் ஒரு மாநாட்டையே நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
மறுபுறம் தமிழ்நாட்டில் பண்பாட்டு படையெடுப்பு நடக்கிறது. புரனத்தை வரலாறாக மாற்ற இருக்கிறார்கள். எனவே தமிழ் அறிஞர்களை வைத்து அடுத்த மாதம் மாநாட்டை நடத்த இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். முன்னதா இந்த மாநிலக்குழு கூட்டத்தில் மருத்துவ உயர்கல்வியில் இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு மாநில உரிமையை பறிக்கும் செயல். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது சமூக அநீதி என்பதால் அதை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும். வேலைவாய்ப்புகள், இல்லம் தேடி கல்வி, எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி நடைபெறும் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு, நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications