விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு 2024.. அன்னியூர் சிவா vs சி.அன்புமணி.. வெற்றி யாருக்கு?
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள் என்பது வரும் சனிக்கிழமை தெரிந்துவிடும்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலாமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுடன் அறிவிக்காமல் இந்த தேர்தல் தனியாக அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். இந்ததேர்தலில் தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 8-ந் தேதி மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் தகுதிவாய்ந்த வாக்களர்கள் இருந்தனர். இவர்கள் வாக்களிக்க 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்த சச்சரவும் இல்லாமல் தொடங்கியது. யே ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களித்தார்கள். காலையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் வெயிலின் தாக்கத்தால் குறைந்து இருந்தது.ஆனால் மாலையில் அதிகமான மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை கொசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நின்ற கனிமொழி என்பவரை அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தவிர வேறு பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி, வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்கு முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாாிகளால் சீல் வைக்கப்பட்டதுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அங்குதான் வாக்குகள் எண்ணப்படுகிறது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் எப்படியாவது வென்று திமுகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறது. இது சாத்தியமா இல்லை வழக்கம் போல் திமுக வெல்லுமா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications