அதிமுக ஓட்டு யாருக்கு? பலம் பெறுமா பாமக? நாதக கணக்கு பலிக்குமா? விடை தருமா விக்கிரவாண்டி ?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? இந்தக் கட்சியின் ஓட்டுக்கள் யாருக்கும் போகும்? பாமக இரண்டாவது இடத்தை தக்க வைக்குமா? அல்லது நாதக வாக்கு வங்கி அதிகரிக்குமா? இது பற்றி சில விளக்கங்களை முன்வைத்துள்ளார் பத்திரிகையாளர் ஷ்யாம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. ஆகவே தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆளும் கட்சியான திமுக போட்டியிடுகிறது. அதை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதால் அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள பாமக நிற்கிறது. அடுத்து நாம் தமிழர் கட்சியும் போட்டிப் போடுகிறது.

vikravandi bypoll AIADMK

ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சி 2வது இடத்திற்கு வருகிறதோ அக்கட்சி வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேரம் பேச இந்த வாக்கு சதவீதம் உதவியாக இருக்கும் என்பதால் பாமகவும் நாதகவும் போட்டிப் போட்டு களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

விக்கிரவாண்டியில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற போட்டியைவிட அதிமுக ஓட்டுகளை யார் பெறுவதில் என்பதில்தான் பாமகவுக்கும் நாதகவுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. பாமக ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் போட்டு வாக்கு கேட்டு வருகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு எதையும் சொல்லவில்லை. அன்புமணி ராமதாஸ், தங்களின் கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் உள்ளதாக ஜெயலலிதா படத்தைப் போட்டுள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார். நாதக போஸ்டரில் ஜெயலலிதா படம் போடவில்லை. ஆனாலும் வெளிப்படையாக அதிமுக, தேமுதிக தொண்டர்கள் ஒருமுறை வாக்களிக்க வேண்டும் என்றும் தான் அதிமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்துள்ளதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

2010இல் பென்னாகரத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் தமிழ்க் குமரன் 41,285 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதைப்போல விக்கிரவாண்டியில் வன்னியர்களை ஒன்று திரட்டி 2வது இடத்தைப் பாமக பிடித்துவிடும் எனவே போட்டியிட்டால் 3வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என்பதை மனதில் வைத்துத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தலைப் புறக்கணித்துள்ளார் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக ஓட்டுகள் எந்தக் கட்சிக்குப் போகும் என்பது குறித்து தனது கணிப்புகளை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் இது பற்றி, “1989இல் பாமக தொடங்கப்பட்டுத் தனித்துப் போட்டியிட்டது. அப்போது வாழப்பாடி ராமமூர்த்தி என் மூலமாக ஒரு தகவலை டாக்டர் ராமதாசுக்கு சொல்லவேண்டும் என அனுப்பி வைத்தார். நான் போய் ராமதாசை சந்தித்து, “வன்னியர்கள் அதிகமாக உள்ள தொகுதியில் அனைத்து கட்சியின் அந்தச் சமுகத்தைச் சேர்ந்த வேட்பாளரைத்தான் நிறுத்துவார்கள்.

அப்படிப் பார்த்தால் வன்னியர் அல்லாதவர்கள் வாக்கு எந்தக் கட்சிக்கு விழுகிறதோ அந்தக் கட்சிதான் வெற்றி பெறும். ஆகவே, பாமக தனித்துப் போட்டியிட வேண்டாம். காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். நீங்கள் வன்னியர் கட்சி என்பதால், காங்கிரஸை ஆதரித்தால் ஒரு பொதுத்தன்மை கட்சிக்கு கிடைக்கும் என்று சொன்னேன். அப்போது காங்கிரஸ் அதிமுக கூட்டணியிலிருந்தது.

ஆனால், ராமதாஸ் அதை ஏற்கவில்லை. புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று வாதிட்டார். அதுவும் இன்றுவரை நடக்கவே இல்லை. அப்படிப் பார்த்தால் வெறுமனே சாதிய ஓட்டுகள் மட்டுமே வெற்றியைத் தேடித் தராது. அதை எத்தனையோ தேர்தல்களில் பார்த்துவிட்டோம். இப்போது விக்கிரவாண்டியில் வன்னியர் நிற்பதால் மட்டும் அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த ஓட்டுக்களும் பாமகவுக்குக் கிடைக்காது.

வெற்றி பெற வேண்டும் என்றால் பிற சமூகத்தினரின் வாக்குகளையும் பெற்றால்தான் வெற்றி சாத்தியம். இப்போது களத்தில் உள்ள வேட்பாளர்களில் தனது சொந்த திறமையை வைத்துப் பிற சமூகத்தினரை யார் தன் பக்கம் ஒருங்கிணைக்கிறாரோ அவர்தான் வெற்றி பெற முடியும்.

அதிமுக விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை என்பதால் அக்கட்சியினர் யாரும் ஓட்டுப் போடாமல் இருக்கப் போவதில்லை. இடைத்தேர்தலில் ஓட்டுகள் எப்படி வாங்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். ஆகவே, கிடைக்கின்ற சலுகையைப் பெற வேண்டி அனைவரும் ஓட்டுப் போடவே செய்வார்கள். அப்படிப் பார்த்தால் அதிமுக தொண்டர்களும் ஓட்டுப் போடவே செய்வார்கள்.

அதிமுகவும் ஓட்டு வங்கி என்பது திமுகவுக்கு எதிரானது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அப்படி விடாப்பிடியாக இரட்டை இலைக்கே ஓட்டுப் போடுவேன் என வைராக்கியமாக உள்ள அதிமுகவினர் எத்தனை சதவீதம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்படியானவர்கள் குறைந்துள்ளார்கள்.

அப்படிப் பார்த்தால் அதிமுக விக்கிரவாண்டியில் போட்டிப்போடவில்லை. ஆகவே, திராவிடக் கட்சி என்ற அடிப்படையில் அக்கட்சியின் ஓட்டுகள் திமுகவுக்குப் போகுமா? அல்லது பாஜக கூட்டணிக் கட்சியில் உள்ளதால் பாமகவுக்குப் போகுமா? அல்லது நாதகவுக்கு போகுமா? என்று பார்க்கவேண்டும்.

தேமுதிகவுக்கு விஜயகாந்த் இருந்தபோது இருந்த ஓட்டு வங்கி இப்போது விக்கிரவாண்டியில் இல்லை. திமுகவின் ஓட்டு வங்கி முன்பைவிட அதிகரித்துள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணி இன்னும் வலுவாகவே உள்ளது. விக்கிரவாண்டி என்பது பாமகவுக்கும் சோதனைக் களம்தான். ஏனென்றால் அவர்கள் 30% வாக்குகளையாவது கட்டாயம் பெற்றாக வேண்டும்” என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+