அம்மா, அப்பாவை கவனிக்காத மகனுக்கு பாடம்..எழுதிக்கொடுத்த சொத்தை ரத்து செய்த ஆட்சியர் மோகன்..அதிரடி!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர்களை பராமரிக்காத மகனுக்கு பெற்றோர்கள் எழுதி தந்த சொத்து பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் மோகன் ரத்து செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம். இவரும், இவரின் மனைவி சாந்த குமாரி இருவரும் கண்டாச்சபுரம் பகுதியில் உள்ள தங்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த வீடு மற்றும் அருகில் உள்ள நிலம் சேர்த்து மொத்தம் 10 ஏக்கர் நிலத்தை இவர்கள் தங்கள் மகனுக்கு எழுதிக்கொடுத்து உள்ளனர்.

சொத்து பத்திரம்
கடைசி காலத்தில் மகன் தங்களை பார்த்துக்கொள்வார் என்று நம்பி இவர்கள் சொத்து எழுதிக்கொடுத்து உள்ளனர். ஆனால் அந்த மகனோ தாய், தந்தை இருவரையும் பார்த்துக்கொள்ளாமல், சொத்து கிடைத்த வரை சந்தோசம் என்று இருந்துள்ளார். இவர்களுக்கு சரியாக சாப்பாடு கூட போடாமல் கொடுமைப்படுத்தி இருக்கிறார். சொத்து கிடைக்கும் வரை ஒரு மாதிரி நடத்திவிட்டு, சொத்து கிடைத்த பின் அவர்களை கொடுமைப்படுத்தி உள்ளார்.

ஆட்சியர் அலுவலகம்
இதையடுத்து பெற்றோர்கள் இருவரும் விழுப்புரம் ஆட்சியர் மோகனின் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்க சென்றனர். ஆனால் அப்போது அங்கு ஆட்சியர் இல்லை என்று கூறப்படுகிறது. ஆட்சியர் வந்த பின்பும் அவர்கள் இருவரும் அவரை சந்திக்க முடியவில்லை. ஆட்சியர் தொடர்ந்து வேறு வேலையில் இருந்ததால் இவர்களை சந்திக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராஜ மாணிக்கம் - சாந்த குமாரி தம்பதியினர் அங்கேயே தர்ணா போராட்டம் செய்துள்ளனர்.

தர்ணா போராட்டம்
தங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அங்கேயே தர்ணா போராட்டம் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அழைத்து ஆட்சியர் மோகன் பேசினார். அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார். இந்த நிலையில்தான் ராஜ மாணிக்கம் சாந்தகுமாரி தம்பதி அவர்களின் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

ஆட்சியர் மோகன்
சொத்து பத்திரம் எழுதி கொடுக்கப்பட்ட பின் பெற்றோரை அவர் மோசமாக நடத்தி இருக்கிறார். இதையடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு ராஜ மாணிக்கம் - சாந்த குமாரி தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர். வயது முதிர்ந்த தம்பதிக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு மூலம் இப்படி உதவி செய்தது வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications