‘மருத்துவமனைக்கே போனதில்லை.. அங்கு பிரச்சனையே வேறு’ – விழுப்புரம் பள்ளி மாணவன் அம்மா கண்ணீர்
விழுப்புரம்: விழுப்புரம் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ் திடீர் உடல்நலக்குறைவால் வகுப்பறையில் மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோகன்ராஜின் அம்மா, என் மகன் ஆரோக்கியமாக தான் இருந்தான். ஒருநாள் கூட அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில்லை என்றும், பள்ளியில் புத்தக சுமைகளுடன் 4 மாடி ஏறி சென்றதுதான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திரு.வி.க வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு விழுப்புரம் மேல வீதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் மகன் மோகன்ராஜ் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை சிறப்பு வகுப்புக்காக அவர் காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் சிறிது நேரத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

மாணவன் உயிரிழப்பு
பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் அளவுக்கு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.
இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், மாணவன் மயங்கி விழும் சிசிடிவி கேமரா காட்சிகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மாணவன் மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில் முழு விபரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாணவன் மோகன்ராஜின் திடீர் உயிரிழப்பு, அவரின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அம்மா கண்ணீர்
இதுகுறித்து மாணவன் மோகன்ராஜின் அம்மா மகேஸ்வரி செய்தியாளர்களிடம், "எனக்கு இரண்டு மகன்கள். மோகன்ராஜ் இரண்டாவது மகன். அவனுக்கு 16 வயதாகிறது. இதுவரை ஒரு நாள்கூட மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில்லை. மாடி படி ஏறிதான் பிரச்சனையாகியுள்ளது. 4 மாடி ஏறி அவன் வகுப்பறைக்கு செல்ல வேண்டும். அவ்வளவு புத்தக சுமைகளுடன் 4 மாடி ஏறி, இறங்குவது சுலபமில்லை.
அப்போதுதான் ஏதாவது ஆகியிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். இன்றைக்கு காலை 5 நிமிடம் தாமதமாக வந்ததால் அவனை வெளியில் நிற்க வைத்துள்ளனர். காலை 7 மணிக்கு எல்லாம் வீட்டில் இருந்து கிளம்பிவிடுவான். காலை டிபன், மதியம் சாப்பாடு கட்டிக் கொடுத்துவிடுவேன். பள்ளிக்கு சென்று தான் சாப்பிடுவான். அதேபோல இன்றைக்கும் காலை 7 மணிக்கு பள்ளி புறப்பட்டான். 7.15 மணியளவில் எனக்கு போன் வந்துவிட்டது.
காரணம் என்ன
தம்பி கீழே விழுந்துவிட்டான். உடனே வாங்க என்று கூறினார்கள். நான் அங்கு சென்று பார்த்தபோது அவனை கீழே படுக்க வைத்து கை, காலை தேய்த்து கொண்டிருந்தார்கள். என் மகனுக்கு எந்த நோயும் இல்லை. 4 மாடி எடை அதிகமுள்ள புத்தக பையை சுமந்து செல்வதுதான் பிரச்சனை. என் மகன் ஆரோக்கியமாக தான் இருந்தான். காலை கூட நன்றாக இருந்தான். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார் கண்ணீருடன்.












Click it and Unblock the Notifications