கன்னியாகுமரி டூ சென்னை.. ரயிலில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் கூச்சல்.. வசமாக சிக்கிய இளைஞர்
விழுப்புரம்:சென்னை பம்மல் பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய பெண், தனது மகனுடன் விடுமுறைக்காக சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சென்றார்.பின்னர் அவர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் தூங்கி கொண்டிருந்த அந்த பெண் பயணியிடம் திடீரென இளைஞர் ஒருவர் அத்துமீற முயன்றாராம்.இந்த விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தசரா விடுமுறைக்கு பலர் சொந்த ஊருக்கு சென்று திரும்பினார்கள். ரயில்களில் சென்ற சிலருக்கு அத்துமீறல் நடந்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளனர். ஓடும் ரயிலில் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேபோல் விழுப்புரத்தில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் கைதாகி உள்ளார்.

சென்னை பம்மல் மூங்கில் ஏரி பகுதியில் வசித்து வரும் 35 வயதுடைய பெண், தனது மகனுடன் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு செல்ல நேற்று முன்தினம் அப்பெண், தனது மகனுடன் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி உள்ளார்.
குறிப்பிட்ட ரயில் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. அந்த பெண், நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அதே பெட்டியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தார். அவர், இதுபற்றி விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனிடையே அந்த ரயில், விழுப்புரம் ரயில் நிலைய 1-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது அந்த இளைஞரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியகோவிலான்குளம் பகுதியை சேர்ந்த ராமதுரை மகன் விக்னேஷ் (25) என்பதும், இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications