விழுப்புரம் புதுமாப்பிள்ளை கலாநிதி.. இப்படியும் கூட எமன் தேடி வருவாரா.. சம்பந்தமே இல்லாமல் சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள மழவராயனூரைச் சேர்ந்த தவமணி என்பவர் தி.மு.க. மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் கலாநிதிக்கு 29 வயது ஆகிறது. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வரும் 16ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கிளம்பியவர் ரயில்வே கேட் அருகில் சென்றார். அப்போது அவருக்கு நடந்த சம்பவம், இப்படியும் கூட எமன் தேடி வருவாரா என்று அதிர வைத்துள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள மழவராயனூரைச் சேர்ந்த தவமணி என்பவர் தி.மு.க. மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் கலாநிதிக்கு 29 வயது ஆகிறது. சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கலாநிதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 16-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கலாநிதி சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்கு பேருந்தில் புறப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் விழுப்புரம் அருகே கோலியனூருக்கு சென்னை ஐடி ஊழியரான புதுமாப்பிள்ளை கலாநிதி வந்தார். பின்னர் அவரை உறவினரான குணசேகரன் என்பவர், இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் கோலியனூர் ரயில்வே கேட் அருகே அவர்கள் வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயிலுக்காக அங்குள்ள ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சென்னை மார்க்கமாக ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே கேட்டை மூடுவதற்குள் கேட்டை கடந்து சென்று விடலாம் என எண்ணிய லாரியின் ஓட்டுநர். அதனை வேகமாக இயக்கினார். இதைப்பார்த்த குணசேகரனும், கலாநிதியும் லாரி செல்லும் அதே சமயத்தில் நாமும் கேட்டை கடந்து சென்று விடலாம் என எண்ணி கடக்க முயன்றுள்ளார்கள்.
அப்போது ரயில்வே கேட்டை லாரி வேகமாக கடக்க முயன்றபோது ரயில்வே கேட் கீழே இறங்கி கொண்டிருந்ததால், கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த கேட்டின் இரும்புக்குழாய் இரண்டாக உடைந்து துண்டானதில் அதன் ஒரு பகுதி, லாரியின் பக்கவாட்டில் வந்த பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த கலாநிதியின் தலையில் பலமாக தாக்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கலாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலாநிதி பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வே கேட் போட்டால் தயவு செய்து காத்திருந்து செல்லுங்கள். அந்த ஐந்து நிமிடம் காத்திருக்க யோசித்தால், நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடைபெறும்..












Click it and Unblock the Notifications