விடுதலை சிறுத்தைகளின் அறிவுசார் பெட்டகம்.. சமூக செயல்பாட்டாளர்.. யார் இந்த டாக்டர் துரை ரவிக்குமார்?
விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக கூட்டணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் ரவிக்குமார் யார் என்பது பற்றி அவருடைய பயோகிராபியை பார்க்கலாம்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது நீண்ட இழுபறி நிலவியது,காரணம் விடுதலை சிறுத்தைகள் உடனான பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்கு பின்பு இறுதியானது. அதில் விழுப்புரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் அக்கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதே இழுபறிக்கு காரணம்.

ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று முடிவுசெய்து அறிவிக்கப்பட்டது. அன்றைய சூழலில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் திமுக மற்றும் கூட்டணிகட்சிகள் இருந்ததே காரணம். ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற சூழல் நிலவியது.
இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே ஒரு மன வருத்தமாகவே இருந்தது. அந்தத் தேர்தலில் ரவிக்குமார் அவர்கள் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அங்கீகாரம் பெற முடியவில்லையே என்ற சிறுத்தைகளின் அந்தக் குறை இந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகளின் பானை சின்னத்தில் டாக்டர் ரவிக்குமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம் நிவர்த்தி ஆகியுள்ளது.மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறும் விடுதலை சிறுத்தைகளின் கனவு நனவாக உள்ளது.
விடுதலை சிறுத்தைகளின் அறிவு சார் முகமாக அதன் தலைவர் திருமாவளவன் இருந்தாலும் அவருக்கு அடுத்து அக்கட்சியின் அறிவு ஜீவியாக, எழுத்தாளராக, ஓர் தேர்ந்த இலக்கியவாதியாக, சாதி ஒழிப்பு போராளியாக, அரசியல் சமூக செயல்பாட்டாளராக பார்க்கப்படுபவர் டாக்டர் ரவிக்குமார். எழுத்தாளர்கள் புகழப்படுவதைப் போல அவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் அதிகமாகவே இருக்கும்.
ரவிக்குமாரும் அதற்கு விதிவிலக்கல்ல, பல்வேறு காலகட்டங்களில் எதிர்க்கட்சிகளால் சமூக இயக்கங்களால் எழுத்தாளர்களால் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளார் ரவிக்குமார். இருப்பினும் விடுதலை சிறுத்தைகளின் கொள்கை முகமாக விடுதலை சிறுத்தைகளின் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக கட்சியின் பொதுச் செயலாளராக ரவிக்குமார் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார் என அரசியல் விமர்சர்கள் கருதுகிறார்கள்.
நிறப் பிரிகையின் ஆசிரியராக இலக்கியப் பணியை தொடங்கிய டாக்டர் ரவிக்குமார் பல்வேறு தமிழ் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் தொகுப்பு நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். பல்வேறு பத்திரிகைகளில் அரசு அரசியல் மற்றும் சமூக செயல்பாடு சார்ந்து கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். சமூகம் சார்ந்த அவரது இலக்கிய பணிகள் மற்றும் பாராளுமன்ற பேச்சுகள் குறிப்பிடத்தக்கவை. மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று சிறப்பான விவாதங்களை முன்னெடுத்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட துரை. ரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட துரை. ரவிக்குமார் 559585 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பானை சின்னத்தில் விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு 477033 வாக்குகள் பெற்று 70703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விடுதலை சிறுத்தைகளின் முழக்கங்களான சாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு, தமிழ் தேசியம் போன்றவற்றை மக்கள் மத்தியில் சேர்ப்பதில் நிறைவேற்றுவதில் விடுதலை சிறுத்தைகள் தலைவரின் தொல் திருமாவளவனின் வலது கரமாக நிற்பவர் துரை.ரவிக்குமார். அவரது இந்த வெற்றி அவருக்கு மட்டுமல்ல கட்சியினருக்கும் மிகவும் முக்கியமானதாகும்












Click it and Unblock the Notifications