மர்மான அன்பு ஜோதி ஆசிரமம்.. சிபிசிஐடி, தடய அறிவியல் துறையினர் ஒரே நாளில் அதிரடி ஆய்வால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அன்பு ஜோதி ஆசிரமத்தில், சிபிசிஐடி போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் தடய அறிவியல் துறையினரும் சோதனை நடத்தினார்கள்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அன்பு ஜோதி ஆசிரமத்தில், சிபிசிஐடி போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் தடய அறிவியல் துறையினரும் சோதனை நடத்தினார்கள். நடமாடும் தடய அறிவியல் வாகனத்துடன் வந்து ஆய்வு செய்தனர். பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பலர் மாயமானதாக புகார் எழுந்த நிலையில் ஆசிரமம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு நடத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. இதுமட்டுமின்றி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாகவும், உடல் உறுப்புகள் திருடப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. மேலும் அந்த ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடித்த போலீஸ்
எப்படி உண்மைகள் வெளியே வந்தது. விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக அவரது உறவினர் புகார் தெரிவித்தார்.

ஆடிப்போன அதிகாரிகள்
இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆஸ்ரமம் நடைபெற்று வருவது அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார்கள் வந்தன. ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் வந்த தகவலை கேட்டு அதிகாரிகள் ஆடிபோயினர்.

ஆசிரம நிர்வாகி கைது
இதனையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

டிஜிபி உத்தரவு
பல்வேறு அதிர்ச்சிக்குரிய சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியானதால் அன்பு ஜோதி ஆஸ்ரம வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டார். இதனையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரம வழக்கு விசாரணையை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இன்று விசாரணை
இதையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சோதனை நடத்தி இதுவரை வழக்கு விசாரணை நடத்தி வந்த தனிப்படை ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா முன்னிலையில் வழக்கு ஆவணங்களை விழுப்புரம் சிபிசிஐடி ஆய்வாளர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து. விசாரணையை மேற்கொள்வதற்காக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் வந்தனர்.

அன்பு ஜோதி ஆசிரமம்
தொடர்ந்து இன்று சிபிசிஐடி எஸ்.பி அருன் பாலகோபாலன் தலைமையிலான அதிகாரிகள் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். விழுப்புரம் தடய அறிவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட நிபுணர்களும் நடமாடும் தடய அறிவியல் வாகனத்துடன் வந்து ஆய்வு நடத்தினார்கள். இந்த சோதனையால் அன்பு ஜோதி ஆசிரமம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications