Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்ந்தா விருதுநகரில் வாழணும்... பரோட்டா சால்னாவுடன் கேட்காமலேயே தேங்காய் சட்னி.. அது ஒரு தவம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட எண்ணெய் பரோட்டா தமிழ்நாட்டில் ஏக பிரபலம்.. நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்னி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள் என்று எழுத்தாளர் முரளி கண்ணன் கூறியிருக்கிறார். கையோடு அவர் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.

ட்விட்டரில் டீ என்ற பெயரில் எழுதி வரும் பிரபல எழுத்தாளர் முரளி கண்ணன் சினிமா,அரசியல், பழைய தமிழ் சினிமா வரலாறு தொடர்பான ஏராளமான கட்டுரைகள் புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "90களில் தமிழ்நாட்டில்.. ஏன் இந்தியாவிலேயே அதிக அளவில் பரோட்டா (புரோட்டா என்றே தென்மாவட்டங்களில் அழைப்பார்கள்) தயாரிக்கும் மாவட்டமாக விளங்கியது விருதுநகர் எனலாம்.

virudhunagar parotta food

விருதுநகர் எண்ணெய் புரோட்டா (பரோட்டோ) எல்லோரும் அறிந்தது. பர்மா கடை பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் தாஜ்,கார்னேசன், கமாலியா மற்றும் பெயர் இல்லாத கடைகளும் ஏராளமாக இருந்தன. அவர்கள் எந்த விதத்திலும் பர்மாவிற்கு குறைந்தவர்கள் இல்லை. பானு என்கிற கடை இப்போதும் இருக்கிறது. அவர்கள் சாதாரணமாக புரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவே பெப்பர் சிக்கன் கிரேவியிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

மாவட்டத் தலைநகர் விருதுநகராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தின் கிங் சிவகாசி தான் என்பது போல, புரோட்டா தயாரிப்பிலும் சிவகாசி தான் நம்பர் ஒன். அங்கே நாள் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர்,டைரி, நோட் புக் மற்ற பிரிண்டிங் வேலைகள் என்று குடும்பத்தோடு வேலை பார்த்துவிட்டு, மாலை வேளையில் பார்சல் வாங்குவதற்கு என்றே நேர்ந்து விடப்பட்ட அவர்கள் குடும்பத்தில் ஒருவனை வாளியோடு அனுப்பிவிடுவார்கள்.

அங்கே எல்லா கடைகளிலும் சாப்பிடும் இடம் சிறியதாகவும் பார்சல் வாங்க நிற்பவர்கள் பெரிய இடத்தில் காத்திருக்கும்படிதான் அமைத்திருப்பார்கள். நான்கு பேர் சாப்பிட்டால் 40 பேர் பார்சலுக்கு நிற்பார்கள். அங்கேயும் விஜயம், ஜானகிராம், பெல் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கடையுமே ஒரு பிராண்ட் தான்.

virudhunagar parotta food

அருப்புக்கோட்டையில் அந்த சமயத்தில் ஏராளமான தறி நெசவாளிகள். அவர்களும் சாயங்காலம் ஆகிவிட்டால் கடைகளில்தான். இனிமை,நடராஜ், முக்கு,கடற்கரை, ஆழாக்கு கடை என ஏகப்பட்ட கடைகள். ஒவ்வொரு கடை சால்னாவும் தயாரிப்பு, தனித்துவம், சுவை என ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருக்கும். வாளியை திறந்து பார்த்த உடனேயே சிலர் என்னடா இனிமையில் வாங்க சொன்னேன் நடராஜுல வாங்கிட்டு வந்துட்ட என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.

ராஜபாளையத்திலும் சொல்லவே வேண்டாம். ஆனந்தாஸ் பாம்பே ரஹமத் என ஏராளமான கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரும் அப்படித்தான். சாத்தூர் கண்ணாடி கடை மட்டன் சுக்கா சாப்பிட்டவர்களுக்கு அது ஒரு பென்ச் மார்க்காகவே மாறிவிடும். வேறு எங்கு சாப்பிட்டாலும் அந்த கடை மாதிரி இருந்தது இல்லை என்று யோசிக்க வைத்து விடும்.

விருதுநகர் மாவட்ட கடைகளில் ஒரு விசேஷம். நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்னி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள். அதுதான் பா காம்பினேஷன் என்பார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, பாலவனத்தம் சீரணி என ஸ்பெஷல் ஐட்டங்களும் இங்கேதான்.

இப்படிப்பட்ட மாவட்டத்தில் உணவு திருவிழா நடத்தினால் எப்படி இருக்கும்? அனேகமாக ஜனவரி 17 & 18 தேதிகளில் விருதுநகரில் உணவுத் திருவிழா நடைபெற இருக்கிறது. உணவு மட்டுமின்றி நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தளவாய் புரம் பகுதிகளில் தான் ஏராளமான நைட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் நைட்டிகள் தவிர எல்லா விதமான ரகங்களிலும் அங்கேதான் நைட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

நூறு ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான ரகங்கள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவுத் திருவிழாக்களில் அதுபோன்ற நைட்டி அவுட்லெட்கள் சிலவற்றை அமைத்தால் கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக இருக்கும். விருதுநகர் மாவட்டத்தின் மற்ற தயாரிப்புகளான நோட்புக்குகள் ஸ்டேஷனரிகள் போன்ற ஸ்டால்கள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும். விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் , மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் தயவு கூர்ந்து பரிசீலிக்கலாம்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+