அருப்புக்கோட்டையில் பறந்த சார் பதிவாளர் கார்.. டக்னு உள்ளே பார்த்த அரசு அதிகாரி! ஆடிப்போன விருதுநகர்
விருதுநகர்: சமீபகாலமாகவே அரசு அதிகாரிகளில் சிலர் தொடர்ந்து பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியபடியே உள்ளனர்.. இதில் சில சார் பதிவாளர்களும் விலக்கல்ல.. பதிவுத்துறை, வருவாய்த்துறையில் இதுபோன்று லஞ்சம் வாங்கி கைதாகும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.. இதனால் மாநிலம் முழுவதுமே மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இப்போது விருதுநகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விசாரணையும் நடக்கிறது.
நிலம் பதிவு முதல் சான்றிதழ் பெறுதல் வரை, சட்டப்படி அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும்கூட, வேலை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக, லஞ்சம் ஒரு அவசிய கட்டணம் என்பது போல இன்று மாறிவிட்டதாக, மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்..

அரசு அதிகாரிகள்
ஏழை, எளிய மக்களிடமும் இப்படி லஞ்சம் கேட்பதால்தான், அரசு அலுவலகங்களின் மீது நம்பிக்கை குறைவதோடு, சாதாரண குடும்பங்கள் கூட கூடுதல் செலவால் சிரமப்படுகின்றன. இதோ இந்த விருதுநகர் மாவட்டத்தை பாருங்கள்.
அருப்புக்கோட்டை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அசோக்குமார்.. இவருக்கு 44 வயதாகிறது.. சார்பதிவாளராக (பொ), வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.. இவர் தன்னை நாடி வரும் விண்ணப்பதாரரிடம் பத்திரப்பதிவுக்காக லஞ்சம் வசூலிக்கிறார் என்ற ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றுள்ளது..
அருப்புக்கோட்டை சார் பதிவாளர்
உடனே அந்த புகார்களை அடிப்படையாக கொண்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை (டி.வி.ஏ.சி) அதிகாரிகள் குழு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) ராமச்சந்திரன் தலைமையில் அசோக்குமாரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தது.
கடந்த மாதம் 28ம் தேதி, அசோக்குமார் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென நரிக்குடி பகுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை வழிமறித்து நிறுத்தினார்கள்.. இதை அசோக்குமார் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், உடனடியாக அவரது காரில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
விருதுநகர் அரசு அதிகாரிகள்
அப்போது காரின் சீட்டில், மற்ற பகுதிகளிலும் ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.. இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததுமே அதிர்ந்த அதிகாரிகள், அதற்கான விளக்கத்தை கேட்டனர்.. ஆனால், எந்தவிதமான சட்டப்பூர்வமான ஆவணங்களையோ, விளக்கங்களையோ சார்பதிவாளரால் வழங்க முடியவில்லை.. பிறகுதான் அது பொதுமக்களிடம் பத்திரப்பதிவு பணிக்காகப் பெறப்பட்ட லஞ்சப் பணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது..
கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அசோக்குமாரை, உடனடியாக வீரசோழனில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்..
இதையடுத்து, விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சார்பதிவாளர் அசோக்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்..
கணக்கில் வராத பணம்
சார்பதிவாளர் மீதான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவரது வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக ஆய்வு செய்யும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியராக பதவியில் இருந்து கொண்டே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசோக்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது விருதுநகரில் மிகப்பெரிய அதிர்ச்சியை நேற்று முதல் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications