தவற விட்ட திமுக.. ‘நாடார்’களுக்கு கை நீட்டும் ராதிகா சரத்குமார்.. விருதுநகரில் பக்கா பிளான்!
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடும் நிலையில், நாடார் சமூக தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் பாஜகவுடன், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாமக, ஓபிஎஸ்ஸின் அஇஅதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளன. பாமக 10 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 3 இடங்களிலும் அமமுக 2, புதிய நீதி கட்சி, ஐஜேகே, தமமுக, தேவநாதன், ஓபிஎஸ் அகியோருக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக 20 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது. நடிகை ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமார் சார்ந்த நாடார் சமூகத்தினர் விருதுநகர் மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர். இதனால் விருதுநகரில் ராதிகாவின் பிரபலம் மற்றும் நாடார் ஓட்டுக்களை வைத்து எளிதில் வெல்லலாம் என பாஜக கணக்கு போட்டு, அவரைக் களத்தில் இறக்கியுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் 2007ஆம் ஆண்டு தொடங்கினார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு சரத்குமாருக்கு எந்த தேர்தலும் கைகொடுக்கவில்லை. 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியைச் சந்தித்தார்.
இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சரத்குமார் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், திடீரென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சரத்குமார் ஐக்கியமானார். 17 ஆண்டுகளாக நடத்தி வந்த கட்சியை கலைத்துவிட்டு சரத்குமார் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர், காமராஜரின் சொந்த ஊர். அங்கு இயல்பாகவே நாடார்களில் பெரும்பகுதியினர் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். சரத்குமாரின் சமக போன்ற சிறு சிறு நாடார் சமூகம் சார்ந்த கட்சிகள் தொடங்கப்பட்டபோது கணிசமான நாடார் சமூகத்தவர்கள் அந்த கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இந்நிலையில் சரத் குமார் தனது கட்சியை திடீரென கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தது நாடார் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடார் சமூக சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்து, ராதிகாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் சரத்குமார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் அல்லம்பட்டி கரிக்கோல் ராஜை அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார். நாடார் மகாஜன சங்கம் கிட்டத்தட்ட 1 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக, இந்த லோக்சபா தேர்தலில் 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இதில் 11 புதுமுகங்கள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நாடார் அமைப்புகள் சில திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாஜக தரப்பு, நாடார் சமூகத்தவரை நோக்கி கைகளை நீட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications