ஜெயிச்சிருவோம்னு அலட்சியமா இருக்கக்கூடாது.. திமுகவினருக்கு முக்கிய அட்வைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் இன்று திமுக நிர்வாகிகளைச் சந்தித்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "வரும் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம். ஆனால், அதை நினைத்துக்கொண்டு மெத்தனமாகவும் இருந்துவிடக் கூடாது. அலட்சியமாகவும் இருந்துவிடக் கூடாது." என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நாளை (அக்டோபர் 10) நடைபெறும் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக விருதுநகர் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின், விருதுநகர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

mk stalin virudhunagar dmk

விருதுநகரில் ஸ்டாலின்: அதன்பிறகு, விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் தனியார் மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 2026 சட்டசபை தேர்தல் வியூகங்கள் தொடர்பாக கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஸ்டாலின்: இந்த ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "அரசின் திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கள ஆய்வு செய்வதற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் திட்டமிட்டு என்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். ஆட்சிக்கான கள ஆய்வோடு, கட்சிக்கான கழக ஆய்வும் சேர்த்து நடத்தினால்தான், இந்தப் பயணத்தின் நோக்கம் முழுமையாகும்! அதனால்தான் உங்களையும் சந்திக்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தில் சொல்லி, இது போன்ற சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகரும் திமுகவும்: கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டக் கழக முன்னணியினரான உங்களைச் சந்திப்பதில் பெருமை அடைகிறேன். தேர்தல் நேரங்களில் விருதுநகர் மாவட்டத்தில் மாநாடுகளை நடத்துவதை நாம் வழக்கமாக வைத்திருந்தோம். 2004 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விருதுநகரில்தான் 'தென்மண்டல மாநாடு' நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 40-க்கு 40 பெற்றது தி.மு.க கூட்டணி! அதேபோல் 2024 தேர்தலில் "நாற்பதுக்கு நாற்பது" முழக்கத்தை முதன்முதலாக 2022 விருதுநகரில் நடந்த கழக முப்பெரும் விழாவில்தான் முன்வைத்தேன்! அதை மாநில மாநாடுபோல் நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருவரும் நடத்திக் காட்டினார்கள். சொன்னதுபோலவே 40-க்கு 40 வரலாற்று வெற்றிய நாம் பெற்றோம்! இப்படிப்பட்ட வெற்றிகளுக்குச் சொந்தமான மாவட்டம், இந்த விருதுநகர் மாவட்டம்.

திராவிட இயக்கத்திற்கு விதை தூவிய மாபெரும் மனிதர்கள் வாழ்ந்த ஊர், இந்த விருதுநகர். விருதைப் பெரியார் வி.வி.இராமசாமி, சிவசண்முக சுந்தரனார், கவிஞர் எம்.எஸ்.இராமசாமி, வாலிபப் பெரியார் ஏ.வி.பி.ஆசைதம்பி, இராஜபாளையம் ஆதி நாராயணன், அருமை அண்ணன் தங்கபாண்டியன், விருதுநகர் பெ.சீனிவாசன், நல்லதம்பி, குன்னூர் சீனிவாசன், தொம்பக்குளம் லிங்கசாமி ஆகியோர் களம் அமைத்துத் தந்த மாவட்டம், இந்த விருதுநகர் மாவட்டம்.

என் காலடித்தடம் படாத கிராமமே இல்லை: நான் இளைஞரணிச் செயலாளர் ஆனபோது, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கழகக் கொடி ஏற்றினேன். அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்திற்கு அன்றைய மாவட்டச் செயலாளர் என்னுடைய ஆருயிர் அண்ணன் தங்கபாண்டியன் அவர்களின் அழைப்பின்பேரில், விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்குச் சென்று கொடியேற்றியவன் நான். என்னுடைய காலடித்தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விருதுநகரோடு எனக்குப் பாசமும் - நேசமும் - நெருக்கமும் உண்டு.

விருதுநகர் எப்போதுமே கழகக் கோட்டையாக இருக்கும் மாவட்டம். இந்தப் பகுதியை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் மாபெரும் கழகக் கோட்டையாக கட்டி வளர்த்து வருகிறார்கள். அவர்களின் தோளோடு தோள் நின்று நீங்கள் அனைவரும் செயல்படுவதால்தான் அனைத்துத் தேர்தல்களிலும் இங்கு நாம் வெற்றி அடைந்து வருகிறோம். மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறீர்கள். அதைப் பாராட்டத்தான் வந்திருக்கிறேன். அதே நேரத்தில் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும்தான் வந்திருக்கிறேன்.

மெத்தனமாக இருக்கக்கூடாது: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கு 100 வெற்றியை நாம் பெற்றோம். அதே போன்ற வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டும். வரும் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதை நினைத்துக்கொண்டு மெத்தனமாகவும் இருந்துவிடக் கூடாது. அலட்சியமாகவும் இருந்துவிடக் கூடாது.

மக்களை சந்தித்து நம்முடைய கொள்கைகளை, சாதனைகளைச் சொல்லுங்கள். நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அதை மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்வது மாதிரி துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும்; தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களை ஈர்க்க வேண்டும்: இளைஞர்கள் மற்றும் மகளிரைக் கழகத்தை நோக்கி ஈர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களை அழைத்து, அவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இளைஞர்களுக்குக் கொள்கைகளை விதைப்பது மிகவும் முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களைச் சிறு சிறு அளவில் நடத்துங்கள்.

நேற்றுகூட, கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட "என் உயிரினும் மேலான" பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பேச்சாளர்கள் பங்கெடுத்து இருந்தார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்ற பேச்சாளர்களைப் பயன்படுத்தி நீங்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும். மாதம் ஒரு சிறு கூட்டம் போதும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை!

mk stalin virudhunagar dmk

நோட்டீஸ் அடிங்க: அதேபோல், மகளிருக்காக ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறையாவது சந்திக்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் கழகப் பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் சென்று பார்க்கும்போது மகளிருக்கு என்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நோட்டீஸாக அடித்து வழங்கச் சொல்லுங்கள். நம்முடைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய வேலை.

இங்கு வந்திருக்கும் நிர்வாகிகள் பல்வேறு தொழில்கள் செய்கிறவர்களாக இருப்பீர்கள். உங்களின் வேலையில் கவனம் செலுத்துவது போன்றே, உங்கள் குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்கிச் செலவிடுங்கள். உங்கள் பணிகளுக்கிடையே ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்.

டார்கெட் எவ்வளவு?: உங்களுக்கு நான் நிர்ணயித்துள்ள இலக்கு எவ்வளவு? 200. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்று தலைமைக் கழகம் அறிவிக்கும். வெற்றி பெறுபவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனவே, திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை.

ஏழாவது முறை ஆட்சி அமைக்க விருதுநகரில் இருக்கும் ஏழு தொகுதிகளிலும் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி எனக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் கழக ஆட்சி அமைந்தது என்ற வரலாற்றை எழுத கழகத்தினர் வீரியத்துடன் செயல்படுங்கள். வெற்றியை ஈட்டித் தாருங்கள்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+