பாஜக கூட்டணிக்கு வாங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு.. விருதுநகரில் டிடிவி தினகரன் ஒரே போடு!
விருதுநகர்: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன் செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ள டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து திமுக தனது கூட்டணி கட்சிகளை தக்க வைத்து, ஒவ்வொரு தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இதனால் அதிமுக தரப்பில் இம்முறை எப்படியான கூட்டணி அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜக தலைமையில் போட்டியிட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் நெருக்கமாக பயணிப்பதால், அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் விருதுநகரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீரவணக்கம் செலுத்தினார். இதன்பின் அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், சமத்துவம், சமூகநீதி, பெண் உரிமைகளுக்கான போராடியவர் பெரியார். அரசியல் ஆதாயம் தேடாமல், நாம் தமிழர் கட்சியின் சீமான் சிந்தித்து பேச வேண்டும். அவர் சுயவிளம்பரத்திற்காக தொடர்ந்து பேசி வருகிறார். பெரியாரை தாக்கி பேச வேண்டிய அவசியமில்லை. அவரின் கருத்து வருத்தம் அளிக்கிறது. நாளுக்கு நாள் சீமான் பெரியார் குறித்து பேசுவது அதிகரித்து வருகிறது. இதனை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். 2026ல் அதிமுகவிற்கு மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. லாட்டரி சீட் அடித்தது போல் திடீரென முதலமைச்சரானார். தற்போது திமுக வெற்றிக்கு உதவி செய்வதற்காக தனித்த கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார்.
அதிமுகவுடன் அமமுக இணைவது என்பது தொண்டர்களின் முடிவு தான். ஆனால் அதிமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. என்னை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல. எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும், எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் தான் எடப்படி பழனிசாமி தன் மீது உள்ள பழியை துடைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications