போலி பட்டா.. அத்தனை பேர் முன்பும் அசிங்கப்பட்ட ஆபீசர்.. விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் யாரது
விருதுநகர்: விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் மதுரையிலுள்ள இணை பதிவாளர் வீடுகளில் அதிரடியாக உள்ளே நுழைந்தனர் அதிகாரிகள்.. அங்கே கண்ட காட்சியை பார்த்து அதிர்ந்துவிட்டார்கள்.
போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும்கூட, சில அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டு விடுவார்கள்.

ஒரு நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்கள் போலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்த போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆள்மாறாட்டம்: அந்தவகையில், ஆள் மாறாட்டம் செய்பவர்கள், போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்பவர்கள், போலி பட்டா தயாரிப்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரையும், போலீசார் கைது செய்து வருகிறார்கள்.. இவர்களின் மீது துறைரீதியான நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.இதோ இப்போதும், இணைப்பதிவாளர் ஒருவர் விருதுநகரில் சிக்கியிருக்கிறார்.
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசுவரன்.. 59 வயதாகிறது.. விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக உள்ளார். இவர் நேற்று டியூட்டியை முடித்துவிட்டு, அங்கு கேமரா ஆபரேட்டராக வேலைபார்க்கும் தன்னுடைய உதவியாளர் முத்துகாசியுடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அப்போது, சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சுந்தரேசுவரன்: அந்த நேரத்தில், சுந்தரேசுவரனின் காரும் வந்ததால், அதை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.1.25 லட்சம் இருந்தது தெரியவந்துள்ளது.. இந்த பணத்துக்கு உரிய ஆவணங்களும் இல்லை என்பதால், அதிகாரிகள் அதுகுறித்து விசாரித்தார்கள். அதற்கு சுந்தரேசுவரன், "பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 நாட்கள் வசூலித்த பணம்" என்று சொன்னார்..
2 நாளில் இவ்வளவு பணமா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்தேகமடைந்து, அவரது ஆபீசுக்கே சென்று சோதனை போட முடிவு செய்து கிளம்பினார்கள்.. விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நைட் 8 மணிக்கு ஆபீசர்கள் உள்ளே நுழைந்து, சோதனையில் ஈடுபட்டனர்.. ஆனால், பணம் எதுவுமே சிக்கவில்லை.. இதனால், சுந்தேரசுவரனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதுமே,
மதுரை வீடு: பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்குவதாகவும், தினமும் ரூ.1,200 வாடகை கொடுத்து காரில் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து செல்வதாகவும், மதுரையில் தன்னுடைய வீட்டில் நிறைய பணம் வைத்திருப்பதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சுந்தரேசுவரன், முத்துகாசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், உயர்அதிகாரிகளிடமும் விவகாரத்தை கொண்டு சென்றனர். மேலும், அவரது வீட்டுக்கும் சென்று சோதனையிட்டனர்.. வீட்டில் ரூ.12.30 லட்சம் பதுக்கியிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள்..
இந்த சோதனையில் மேலும் சில முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளதாம்.. அதுமட்டுமல்லாமல், பணம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.
பெருகும் லஞ்சம்: சமீபகாலமாகவே இப்படித்தான், அதிகாரகள் சிக்கி வருகிறார்கள்,.. கடந்த வாரம்கூட, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில், லஞ்சம் வாங்கும்போது, சார்பதிவாளர் பெத்துலட்சுமி, சிக்கினார்.. அவர் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை செய்யும் இடங்களில் எல்லாம், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. லஞ்சம் பெறும் அதிகாரிகளும் கைதாகி வருவது கலக்கத்தை தந்து வருகிறது..
நடவடிக்கை வருமா: அதிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் முறைகேடாக பணம் புழங்குவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்தே புகார்கள் வரத்தொடங்கிவிட்டன.. அதனால், பத்திரப்பதிவு அலுவலங்களில் முறைகேடாக பண பரிமாற்றம் நடப்பதை முழுமையாக தடுக்க, தமிழக அரசு ஏதாவது தீவிர நடவடிக்கையை உடனே எடுத்தாக வேண்டும் என்பதே நம்முடைய அனைவரின் விருப்பமும்... அதுவே நம்முடைய வலிய கோரிக்கையும்..!!












Click it and Unblock the Notifications