சிவகாசி அருகே வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..பறிபோன 2 உயிர்கள்..பலர் படுகாயம்
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஆலையில் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும்போது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்,30, அய்யம்மாள்54, சுந்தர்ராஜ்,27 ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது.
இதில் 2 அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து பட்டாசு விபத்தில் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே குமரேசன்,30, சுந்தர்ராஜ்,27 ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் இருளாயி வயது48,அய்யம்மாள்,54 ஆகிய 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையில் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும்போது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications