ஆசை ஆசையா "முதலிரவு"க்கு போன மாப்ளை.. பின்னாடியே ரூமில் நுழைஞ்சு.. மாரிமுத்து இப்ப மாமியார் வீட்டிலே
விருதுநகர்: விருதுநகர் மகளிர் போலீஸார், மாரிமுத்துவை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் சைல்ட்லைன் 1098 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் குழந்தைகள் என்று பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி 24 மணி நேரமும் 1098 என்ற நம்பரை அழைத்து உதவி கேட்கலாம்.. பாதிக்கப்படும் குழந்தைகளே கூட நேரடியாக இந்த நம்பரை அழைத்துப் பேசுவார்கள்.
சைல்ட் லைன்: அந்தவகையில், மத்திய அரசின் இந்த சைல்ட் லைன் சேவையானது, தமிழகமெங்கும் எல்லா மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது..
தமிழகத்தில் மட்டும் இந்த நம்பருக்கு, வருடத்துக்கு 35,000த்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றனவாம்.. அதாவது 100 போன்கால்கள் வந்தால், அதில், 25 போன்கால்களை, சம்பந்தப்பட்ட குழந்தைகளே நேரடியாக அழைத்து தங்கள் பிரச்னைகளை சொல்கிறார்களாம்.. இதன்மூலம் எத்தனையோ குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன.. எத்தனையோ குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எத்தனையோ பாலியல் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அப்படித்தான், இன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கோவிந்தம்மாள்: விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு, 1098 சைல்டு லைன் தொடர்பு நம்பரில் இருந்து ஒரு புகார் வந்திருந்தது.. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு கல்யாணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது... உடனடியாக அன்புச்செல்வி உத்தரவின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணையில் குதித்தனர்..
சம்பந்தப்பட்ட சிறுமியின் முகவரி, அந்த மாப்பிள்ளையின் முகவரியை கண்டுபிடித்தனர்.. அந்த இடத்துக்கு நேரடியாகவே கிளம்பி போனார்கள்.. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, இனாம் செட்டிக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளுக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புது வண்ணார் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் திருமணம் அப்போதுதான் நடந்து முடிந்தது தெரியவந்தது.. மாப்பிள்ளைக்கு 22 வயதாகிறது.
முதலிரவு: இதையடுத்து, அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றார்கள்.. ஆனால், அதற்குள் இரவு 10 மணியாகி விட்டது... மாப்பிள்ளையையும் பெண்ணையும் அங்கு காணோம்.
"அவர்கள் எங்கே" என்று அதிகாரிகள் விசாரித்தபோது, மாப்பிள்ளையும், பெண்ணும் முதலிரவு ரூமுக்கு சென்றுவிட்டதாக உறவினர்கள் சொல்லி உள்ளனர்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை அழைத்து வரும்படி சொன்னார்கள்.. உடனே உறவினர்களும், முதலிரவு ரூமுக்குள் சென்று, அவர்கள் 2 பேரையும் வெளியே அழைத்து வந்தனர்.

அப்போது அதிகாரிகள் விசாரித்தபோது, சிறுமியின் சொந்த அத்தை மகன்தான், மாப்பிள்ளை என்பது தெரியவந்தது.. அதைவிட ஆச்சரியம், 12 வயது சிறுமியும், அந்த இளைஞரும் காதலித்து வந்தார்களாம்.. இது 2 வீட்டுக்கும் தெரியவந்து, அதற்கு பிறகுதான் கல்யாணம் நடத்த முடிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை கடுமையாக கண்டித்தனர்..
மாமியார் வீடு: சிறுமியை மீட்டு விருதுநகர் சைல்டு லைன் காப்பகத்திலும் சேர்த்தனர்... இதனிடையே, 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுக்கவும், அதன்பேரில் ராஜபாளையம் மகளிர் போலீஸார், மாரிமுத்துவை கைது செய்தனர்.. மாரிமுத்துவின் பெற்றோர், சிறுமியின் அப்பா என இரு வீட்டு பெரியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மாப்பிள்ளை மாரிமுத்து இபபோது நிஜமாகவே "மாமியார்" வீட்டுக்கு போயிருக்கிறார்.












Click it and Unblock the Notifications