யார் மிகப்பெரிய நாடக நடிகர்.. சசிகலாவை கேட்டா தெரியும்.. உதயநிதி ஸ்டாலின் சுளீர்!
விருதுநகர்: மிகப்பெரிய நாடக நடிகர் யார் என்பதை, சசிகலாவை கேட்டால் தெரியும் என அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாமில் மனுக்களை சீராய்வு செய்யும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகரில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் திமுக விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, "இளைஞரணி உறுப்பினர்களுக்கு 'நீட் விலக்கு, நம் இலக்கு' என்ற பிரசுரம் வழங்கப்பட்டு, அதில் இணைய 'லிங்க்' வழங்கப்பட்டுள்ளது. 50 நாளில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும். இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இது தனிப்பட்ட உதயநிதியின் பிரச்சனை இல்லை. திமுகவின் பிரச்சனை இல்லை. இது தமிழகத்தின் பிரச்சனை.
சமீபத்தில் மதுரையில் ஒரு கட்சியின் மாநாடு நடந்தது. அந்த மாநாடு எதற்காக நடந்தது என்றே தெரியவில்லை. அந்த மாநாட்டில் அந்த இயக்கத்தின் வரலாறு, கொள்கை எதாவது பேசப்பட்டதா என்றால் இல்லை. ஆனால் திமுக இளைஞரணி நடத்தப்போகும் சேலம் மாநாடு இந்தியாவே பேசும் வகையில் அமையும்.
நீட் தேர்வால் 6 ஆண்டுகளில் மட்டும் 22 குழந்தைகளை இழந்துள்ளோம். அரியலுார் அனிதாவில் தொடங்கி, சென்னை குரோம்பேட்டை ஜெகதீசன் வரை நீட் தேர்வில் தகுதி பெற முடியாததால் தற்கொலை செய்துள்ளனர். திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியையும் நீட் விலக்கு கோரும் போராட்டத்திற்கு அழைத்தோம்.
நீட் தேர்வில் அரசியல் புகுத்த வேண்டாம், இது மக்கள், மாணவர்களுக்கான போராட்டம். நீட் தேர்வு ரத்தானால் மொத்த பலனையும் நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று அன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் கூறினேன். இன்றும் அதையேதான் கூறுகிறேன். நீட் தேர்வு ரத்துக்காக பெறப்பட்ட கையெழுத்துக்களை இளைஞரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைப்போம். தமிழக முதல்வர், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்.
பிரதமர் மோடி, எங்கு போனாலும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் என்னைப் பற்றி தான் பேசுகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததால் வளர்ந்த ஒரே குடும்பம் கருணாநிதியின் குடும்பம்தான் என்று மத்திய பிரதேசத்தில் கூட பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அவருக்கு ஒன்றைச் சொல்கிறேன். ஒட்டுமொத்த தமிழகமுமே கருணாநிதியின் குடும்பம் தான்.
பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பதரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார்கள். 15 பைசாவாவது போட்டீர்களா? மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், இரண்டாவது தவணை பணமே அனைவருக்கும் ஏறிவிட்டது. ஆனால் இவர்கள் இன்னமும் 15 லட்சத்தை கொண்டுவரவில்லை. பாஜக. ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் வளர்ந்த ஒரே நபர் அதானி தான்.
இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ஒரு நாடகம், நான் கையெழுத்திட மாட்டேன் என்கிறார். யார் மிகப்பெரிய நாடக நடிகர் என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை கேட்டால் தெரியும். அவரது காலை பிடித்து முதல்வராகி, பின் அந்தம்மாவின் காலை வாரிவிட்டவர் பழனிசாமி. 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அடிமைகளை விரட்டியது போல் 2024ஆம் ஆண்டு தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications