யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்பட 4 பேர் கைது.. பாலியல் சீண்டலில் சிறுவர்களை ஈடுபடுத்தியதால் அதிரடி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை வீடியோவாக எடுத்து பணம் பறிக்க முயன்ற வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமும், யூடியூபருமான திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சோஷியல் மீடியாவில் வித்தியாசமான செய்கைகள் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் பிரபலமானவர் தான் திவ்யா கள்ளச்சி. கார்த்திக் ஐ லவ் யூ.. கார்த்திக் மாமா.. என கார்த்திக் என்ற நபர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும்,அவரை தேடி வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு இவர் பிரபலமானார்.

இவர் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். மேலும் திவ்யா கள்ளச்சி வெளியிடும் வீடியோக்களும், அவ்வப்போது பிற யூடியூப் சேனல்களுக்கு கொடுக்கும் பேட்டிகளும் சர்ச்சையை கிளப்பும்.
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலரான பெண் ஒருவர் திவ்யா கள்ளச்சி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது திவ்யா கள்ளச்சி குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வருகிறார். அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவை வைத்து பணம் சம்பாதிக்கிறார். சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப் குழுவில் அனுப்பி உள்ளதோடு, தவறான உறவுக்கும் சிறுவர்களை அனுப்பி வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி திவ்யாவின் செல்போனில் பல ஆபாச வீடியோக்கள் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் தான் தற்போது 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திவ்யா கள்ளச்சி, கார்த்தி, சித்ரா, ஆனந்த் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications