"மருது சகோதரர்கள்".. முதல்வர் ஸ்டாலினால் பாராட்டப்பட்ட இரட்டை அமைச்சர்கள்.. மகிழ்ந்த தென் மாவட்டம்
விருதுநகர்: மருது சகோதரர்கள் என அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவையும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனையும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், செப்டம்பர் 17 ஆம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் ஆகிய மூன்று விழாவையும் சேர்த்து திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு இந்த விழா விருதுநகரில் நடந்தது. விருதுநகர்- சாத்தூர் சாலையில் பட்டம்புதூர் அண்ணா நகரில் கலைஞர் திடலில் நடந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனும் செய்திருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இருவரையும் வெகுவாக பாராட்டினார். அவர் பாராட்டுகையில், எழுச்சியுள்ள தமிழகத்திற்கு எழுச்சி தரும் கழகம். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று உறுதியேற்று வாழும் கழகம். நான் இந்த மேடைக்கு வரும் போது இரு புறமும் கருப்பு சிகப்பு வண்ணக் கொடிகள் இருப்பதை பார்க்கிறேன்.

வச்ச கண் வாங்காமல் பார்த்த முதல்வர்
அந்த கொடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். அந்த விழாக்களில் கட்சிக் கொடியை கட்டக் கூடாது என நான் கண்டிப்பாக சொல்லிவிட்டேன். இதனால் பலர் என் மீது வருத்தத்தில் இருந்தார்கள். அந்த வருத்தத்தை போக்கக் கூடிய வகையில் இரு வண்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

மூவர்ணக் கொடி
கோட்டையில் நான் மூவர்ணக் கொடி ஏற்றுவதற்கு காரணமாக இருந்த கொடிதான் இந்த இரு வண்ண கொடி. விருதுநகர் என்பது எல்லாரும் குறிப்பிட்டது போல் இது கழகத்தின் கோட்டை. சட்டசபை தேர்தலுக்கு முன்பு காணொலியில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் எழுச்சிக் கூட்டங்களை நடத்தினோம். அப்போது மாவட்டச் செயலாளர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசுவும் ஒரு உறுதிமொழியை அளித்தார்கள்.

7 சட்டசபை தொகுதிகள்
விருதநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைப்போம் என உறுதியளித்தனர். அதே போல் 7 இல் 6 இடங்களில் திமுகவை வெற்றி பெற வைத்தார்கள். இதனால்தான் விருதுநகர் மாவட்டம் கழகத்தின் கோட்டை என குறிப்பிட்டேன். சுயமரியாதை இயக்கத்தினுடைய கோட்டையும் இந்த விருதுநகர்தான்.

வழிநடத்த வேண்டும்
இளைஞர் அணியை நான் வழிநடத்த வேண்டும் என்பதற்காக எனக்காக குரல் கொடுத்தவர்தான் தங்கபாண்டியன். விருதுநகர் இரு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனும் வடக்கு மாவட்ட கழக செயலாளராக தங்கம் தென்னரசுவும் உள்ளார்கள்.

தமிழக அமைச்சரவை
இருவரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். மருது சகோதரர்களை போல இந்த மாவட்டத்தைக் காத்து வருகிறார்கள் என பல நேரங்களில் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். மருது சகோதரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் என்றால் இவர்கள் இருவரும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் என்ற அடிப்படையில் முப்பெரும் விழாவை நன்றாக நடத்தியமைக்கு தலைமைக் கழகம் சார்பில் பாராட்டுகள் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications