ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தள்ளிவிடலை..தவறி விழுந்தாரு..பாஜகவின் குரலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: உத்தரப்பிரதேச போலீசாரால் ராகுல் காந்தி தள்ளிவிடப்படவில்லை.. ராகுல் காந்தி தவறி விழுந்திருப்பார் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தாஸில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் நள்ளிரவில் எரித்தது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹர்தாஸ் தலித் பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் போலீசாரால் ராகுல் காந்தியை பிடித்து தள்ளியதில் அவர் கீழே விழுந்தார்.

மோடி கொடும்பாவி எரிப்பு
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்றும் இன்றும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

தள்ளிவிடவில்லை
இதனிடையே விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உத்தரப்பிரதேச சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி அங்கு சென்று வம்பிழுத்திருக்கக் கூடாது. ராகுல் காந்தியை போலீசார் தடுத்துதான் இருப்பார்கள். தள்ளிவிட்டிருக்கமாட்டார்கள். ராகுல் காந்தி தவறி கீழே விழுந்திருப்பார் என்றார்.

ஈனத்தனமான அரசியல்
அத்துடன், பிரதமர் மோடி பெருந்தன்மைக்குரியவர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுலை தள்ளிவிடுவதை போன்ற ஈனச் செயலை செய்யமாட்டார். இது சித்தரிக்கப்பட்ட ஒரு சம்பவம். இதனை வைத்து ஈனத்தனமான அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது என்றும் கடுமையாக சாடினார் ராஜேந்திர பாலாஜி.

எடப்பாடியின் நல்லாட்சி
மேலும் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. வலுவான, வலிமையான, பொலிவான ஆட்சி நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர். அதிமுகவில் அனைத்துமே பெரிய விழுதுதான். தமிழகத்தை அதிமுகவே தொடர்ந்து ஆளும் என்றார் ராஜேந்திர பாலாஜி.


Click it and Unblock the Notifications
