சிவகாசியையே உலுக்கிய ரெங்கபாளையம்.. 14 பேரை கருக்கிய பட்டாசு ஆலை.. ஓனர் உட்பட 3 பேரை தூக்கிய போலீஸ்
விருதுநகர்: 14 பேரின் உயிரை பறித்த, சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசியில் நேற்று ஒரே நேரத்தில் வேறு வேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம் புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கிவரும், பட்டாசு ஆலையிலும், அதேபோல், சிவகாசி அருகே மாறனேரி தாலுகாவில் உள்ள கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையிலும், இந்த விபத்துக்கள் ஏற்பட்டன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முத்து விஜயன்.. இவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது..

தீயணைப்பு: நேற்றைய தினம், வழக்கம் போல், தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்த முயன்றார்கள்.. ஆனாலும், பட்டாசு ஆலையின் ஒரு அறையில் அதிகளவு பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்ததால், அந்த அறையில் இருந்த பட்டாசுகள் எல்லாமே வெடித்து சிதறின.இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி, பஞ்சவர்ணம், மகாதேவி, முனீஸ்வரி, தங்கமலை, அனிதா உள்ளிட்ட 12 பெண் தொழிலாளர்கள் பாலமுருகன் என்ற ஒரு ஆண் தொழிலாளர் உட்பட 13 தொழிலாளர்கள் தீயில் கருகி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
2 வெடிவிபத்துகள்: இந்த வெடிவிபத்து நடப்பதற்கு, 15 நிமிடத்திற்கு முன்பாகத்தான், சிவகாசி அருகே சிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், மருந்து கலக்கும்போது ஏற்பட உராய்வால், வெடிவிபத்து நடந்தது..
அந்த விபத்தில் வேம்பு என்ற தொழிலாளி பலியானார். அதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரே நாளில், ஒரே நேரத்தில், இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தது, சிவகாசியையே அதிர வைத்தது.. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிரடி கைது: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியும், வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சிவகாசியை பொறுத்தவரை, 1,085 நிரந்தர பட்டாசு ஆலைகள் அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஆனால், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை உரிமையாளர்கள் வேகப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எம்.புதுப்பட்டி அருகே ரங்கபாளையத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications