பரபரப்பை கிளப்பிய ஆடியோ.. மாணவிகளிடம் தவறான பேச்சு.. நிர்மலா தேவி வழக்கு.. ஆரம்பம் முதல் முடிவு வரை
விருதுநகர்: கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையில் பணியாற்றி வந்தார். பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரியில் படித்து வந்த ஏழை மாணவிகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

அப்பகுதியின் முக்கிய பிரமுகர்களுக்கு அந்த மாணவிகளை அழைத்துச் செல்வதே அவரது நோக்கமாக இருந்துள்ளது. அப்படி தான் கடந்த 2018 ஆம் ஆண்டு, மாணவி ஒருவரிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோ பகீர் கிளப்பி இருந்தது. அந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே இப்படி நடந்து கொள்வாரா எனத் தமிழகமே கொந்தளித்தது. இந்த வழக்கில் நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் மாணவர் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று, கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்தியஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
* 15. 4. 2018: மாணவிகளிடம் பேராசிரியர் நிர்மலா தேவி தவறாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
* 16. 04. 2018: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிர்மலா தேவிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
* 17. 04. 2018: நிர்மலா தேவி வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
* 19. 04. 2018: நிர்மலா தேவி வழக்கு சம்பந்தமாக அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டார்.
* 24. 04. 2018: நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.
* 25. 04. 2018: நிர்மலா தேவி வழக்கில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது.
* 13. 07. 2018: நிர்மலா தேவி வழக்கில் 1,160 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
* 07. 09. 2018: நிர்மலா தேவி வழக்கில் இரண்டாம் கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
* 12. 03. 2019: நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
* 26. 04. 2024: தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் உடல் நலக்குறைவை காரணம் காட்டி அன்று நிர்மலா தேவி ஆஜர் ஆகாததால் 29 ஆம் தேதிக்கு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
* 29. 04. 2024: இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், 2 மற்றும் 3வது குற்றவாளிகளான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தார். கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தார். மேலும் 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.
* 30. 04. 2024: கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications