Koomapatti: கூவி கூவி கூமாபட்டிக்கு அழைத்த இளைஞர்! பிளவக்கல் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை அடுத்த பிளவக்கல் அணைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பொதுப் பணித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓவர்நைட்டில் ஒபாமா ஆவது போல், ஒரு ரீல்ஸ் மூலம் புகழ்பெற்றது கூமாபட்டி!
கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் "ஏங்க கூமாபட்டிக்கு வாங்க" என இளைஞர் ஒருவர் ரீல்ஸ் போட்டது பயங்கர டிரெண்டானது. தண்ணிய பாருங்க.. சர்பத் மாதிரி இருக்கும்.. 7அப் மாதிரி இருக்கும்! தனி ஐலாண்டு கூமாபட்டி.. கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க!

கவலையா இருக்கா கூமாபட்டிக்கு வாங்க. காதல் தோல்வியா கூமாபட்டிக்கு வாங்க என கூவி கூவி அழைத்த ஒரு வீடியோ வைரலானது. இதையடுத்து எங்கே இருக்கிறது கூமாபட்டி என அறிய பலர் கூகுள் மேப்பில் தேடினர். அப்போதுதான் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே இருக்கும் சிறிய கிராமம் கூமாபட்டி என தெரியவந்தது.
கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை ஆகிய அணைகளுக்கு முன்பே கூமாபட்டி இருக்கிறது. இந்த ஊருக்கும் பிளவக்கல் அணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டுக்கும் இடையிலான தூரம் 10 கி.மீ. ஆகும். பிளவக்கல் அணையில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் கூமாபட்டிக்கு வாங்க என அழைத்திருக்கிறார்.
இந்த ரீல்ஸை நம்பி ஏராளமானோர் அங்கு படையெடுத்து சென்றனர். வீடியோவில் போட்டது போல் கூமாபட்டியை சுற்றி எந்த நீர் நிலையும் இல்லை. இருந்த ஒரு குளமும் வாய்க்காலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
பிளவக்கல் பெரியார் அணையை முறையாக பராமரிக்காததால் அந்த ஊருக்கு தண்ணீர் வரத்து இல்லை என்கிறார்கள். பிளவக்கல் அணைக்காவது செல்லலாம் என நினைத்து அங்கு சென்றால் அங்கு குளிக்க அனுமதி இல்லை என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
இதனால் அந்த இளைஞரின் வீடியோவை நம்பி காரை எடுத்துக் கொண்டு சென்றது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக கூறி பலர் திரும்பி வந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மிகப் பெரிய மோசடி இந்த கூமாபட்டி மோசடி என சமூகவலைதளங்களில் கண்டனங்களும் எழுகின்றன.
எனினும் உள்ளூர்வாசிகளின் துணையுடன் ஒரு சிலர் பிளவக்கல் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதையடுத்து அணைக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் பொதுப் பணித் துறை அடைத்தது.
ரீல்ஸ்களை நம்பி யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம். தடையை மீறி உள்ளே நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பணித்துறை எச்சரித்துள்ளது. இனி கூமாபட்டிக்கு ரீல்ஸுக்காக செல்வதை மறந்துவிட வேண்டியதுதான்!












Click it and Unblock the Notifications