விருதுநகர் விஏவுக்கு வில்லங்கம்.. மாற்றி யோசித்த அருப்புக்கோட்டை விவசாயி.. ஆடிப்போன அரசு ஊழியர்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தில் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இப்ராகிம் மற்றும் கிராம உதவியாளர் சிங்காரம் ஆகியோர் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
என்னதான் சட்டங்கள் இருந்தாலும் ஒரு சில அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருப்பதாக பலர் புலம்புகிறார்கள். குறிப்பாக வருவாய்துறை சம்பந்தமான அலுவலங்களில் புகார்கள் அதிகமாக உள்ளன. நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், விஏஓக்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். ஆடியோ ஆதாரத்துடன்புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய நோட்டுகளை உங்களுக்கு தருவார்கள். அதன்பின்னர் யார் உங்களிடம் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பாருங்கள். அவரிடம் லஞ்ச பணத்தை கொடுக்க வேண்டும். அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக விஏஓ, சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.. இப்படியான சூழல்கள் இருந்தாலும் லஞ்சம் வாங்கி கைதாகும் ஊழியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகமாகவே உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்பவர் விவசாயி ஆவார். இவர் தன் நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் பெறுவது சம்பந்தமாக வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இப்ராகிமை அணுகியதாக கூறப்படுகிறது. அப்போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சிங்காரம் ஆகியோர், நில அளவை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்தம்பி இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்
விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சின்னத்தம்பியிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்கள். அந்த பணத்தை அவர், கிராம நிர்வாக அலுவலர் இப்ராகிம், கிராம உதவியாளர் சிங்காரம் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேரையும் கையும், களவுமாக கைது செய்தார்கள். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications