தடுப்பூசி செலுத்தினால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம்.. 'குடிமகன்'களுக்கு ஷாக் கொடுத்த கலெக்டர்!
விருதுநகர்: ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான், தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 12-ம் தேதி கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மெகா முகாம்கள்
இந்த முகாமில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த மெகா முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில் இதேபோல் செப்டம்பர் 19-ம் தேதி இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இலக்கைவிடக் கூடுதலாக 16 லட்சத்து 41 ஆயிரம் பேருக்குக் கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தொடர் சாதனை
இதேபோல் கடந்த வாரம் 3-வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதிலும் இலக்கை விட அதிகமாக செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பல இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

70 ஆயிரம் தடுப்பூசிகள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) அனைத்து பகுதிகளிலும் சுமார் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. மேற்குறிப்பிட்ட அனைத்து தடுப்பூசி மையங்களிலும்,போதியளவு தடுப்பூசிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. முதல் தவணை மற்றும் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர் அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று, தடுப்பூசி செலுத்திகொள்ளவும்.

மதுபானம் விற்க கட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை- குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுசெல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும்.
Recommended Video

கடுமையான நடவடிக்கை
தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல் தனி நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் உரிய கடுமையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications