ரயிலில் தட்கல் டிக்கெட் கேன்சல்.. போனது 458 ரூபாய்.. விருதுநகர் இளைஞருக்கு கிடைக்க போவது ரூ.8,458
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வைகுண்ட மூர்த்தி என்பவர் கடந்த 2023ம் ஆண்டு ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார். சென்னை செல்வதற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் எடுத்துள்ளார்.மழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டது.ஆனால் பணம் திரும்ப வழங்கப்படவில்லை.. இந்த விவகாரத்தில் 458 ரூபாய்க்கு ரூ.8458 வழங்க வேண்டும் என்று ரயில்வேக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் கடைசி நேரத்தில் பலர் தட்கலில் புக்கிங் செய்கிறார்கள். இதற்கு வழக்கமான கட்டணத்தை விட அதிகம் என்கிற போதிலும் பலர் தட்கலில் புக்கிங் செய்தாவது ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள். வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு 295 ரூபாய் கட்டணம் ஆகும்.. ஆனால் தட்கலில் டிக்கெட் கட்டணம் 455 ரூபாய் கட்டணம் ஆகும்.. அதாவது வழக்கமான கட்டணத்தை விட ஒரு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும். தட்கலை பொறுத்தவரை ஒரு சிக்கல் உள்ளது.

தட்கல் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து கேன்சல் ஆனால் டிக்கெட்டுக்கு 80 ரூபாய் வசூலிக்கப்படும். நான்கு பேர் குடும்பத்திற்கு டிக்கெட் கிடைக்காமலயே 250 ரூபாய் பறிபோய்விடும். தட்கலில் புக்கிங் செய்த டிக்கெட் நீங்கள் கேன்சல் செய்ய முடியாது. வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால் மட்டுமே கேன்சல் செய்து கொள்ள முடியும். ஒன்று நீங்கள் கேன்சல் செய்து கொள்ளலாம் அல்லது சாட் ரெடியான பின்னர் தானாகவே ரத்து ஆகிவிடும். எப்படி நடந்தாலும் இரண்டாம் வகுப்பு படுக்கை டிக்கெட்டிற்கு 80 ரூபாய் போய்விடும்.
பணம் திரும்ப கிடைக்க ஒரே வழி தான் உள்ளது. அந்த குறிப்பிட்ட ரயிலை , ரயில்வே நிர்வாகமே ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திரும்ப கிடைக்கும்.. இல்லாவிட்டால் போனது போனதுதான்.. இப்படி ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் என்ற பெயரில் 80 ரூபாய் பணத்தை இழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ரயில் கேன்சல் ஆனதால் 458 ரூபாய் பணம் கிடைத்திருக்க வேண்டும்.. ஆனால் அவருக்கு அந்த பணத்தை தராததால் இப்போது 8458 ரூபாய் தர வேண்டும் என்று ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வைகுண்ட மூர்த்தி என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி சென்னை செல்வதற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கல் டிக்கெட் எடுத்து இருந்தார். இந்நிலையில் மழை காரணமாக அந்த ரயில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரயிலில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால் வைகுண்ட மூர்த்திக்கு டிக்கெட் தொகை திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வைகுண்ட மூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில், வைகுண்ட மூர்த்திக்கு டிக்கெட் தொகை ரூ.458, இழப்பீடு ரூ.5,000, வழக்கு செலவு தொகை ரூ.3,000 என மொத்தம் ரூ.8,458-யை தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் இந்திய ரயில்வே ஆணையம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications