வாட்ஸ் அப்பில் மனைவி வைத்த ஸ்டேட்டஸ்! ஒடி வந்த எஸ்.ஐக்கு காத்திருந்த அதிர்ச்சி.. விருதுநகரில் சோகம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனைவி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. "குழந்தையை நல்லா பாத்துக்கோங்க.. நான் செல்கிறேன்" என மனைவி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததை பார்த்து வீட்டுக்கு சென்ற போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்கள், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தான் கொலை செய்ததாகவும், அவரை கைது செய்ய கோரியும் மருத்துவமனையில் மறியல் போராட்டம் நடத்தினர். எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாத்தூர் சப் இன்ஸ்பெக்டர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இளவரசி. இவருக்கு சிவகங்கை மாவட்டம் ஆகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் ஆனது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
சப் இன்ஸ்பெக்டர் அருண் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருவதால், சாத்தூர் பாரதிநகரிலேயே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவன், மனைவி மற்றும் மகள் 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். எனினும் கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியின் 'வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்'
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆளுநரின் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்துக்கொண்டிருந்தார். இதில் மனைவி இளவரசி ஒரு ஸ்டேட்டஸ் வைத்து இருந்தார். அதில் "குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளவும்.. நன்றாக படிக்க வைக்கவும்.. நான் செல்கிறேன்.." என பதிவிட்டு இருந்தார்.
வீட்டுக்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி
இதை பார்த்ததும் அப்படியே உறைந்து போன அருண், உடனடியாக வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மனைவி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். உனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
உறவினர்கள் மறியல் போராட்டம்
இதையடுத்து அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த இளவரசியின் உறவினர்கள் சப் இன்ஸ்பெக்டர் அருண் தான் கொலை செய்ததாகவும், பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்றும் மருத்துவமனை வாயிற்பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
எனினும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனையடுத்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. இதில் இளவரசி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல!
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications