காய் நகர்த்தும் டிரம்ப்.. இந்தியா மீதான வரிக்கு அமெரிக்கா கொடுத்த அடடே விளக்கம்! எப்போ வரை தொடரும்?
வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் இரு நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்கா மீதான வரி தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், உக்ரைன் போர் எப்போது முடியும் என்ற தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளை விதித்துள்ளது அனைவருக்கும் தெரியும். அப்படித் தான் ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது டிரம்ப் வரி விதித்தார். அதில் 25% வரி செயல்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், ஓரிரு நாட்களில் கூடுதல் 25% வரி அமலுக்கு வருகிறது. இது இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதிக்கிறது.

ஜே.டி. வான்ஸ்
இதற்கிடையே வரி தொடர்பாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா மீது 50% வரியை விதித்துள்ளதாகவும் இதன் மூலம் ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை உருவாக்க முடியும் என்றும் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாகச் சமீபத்தில் தான் டிரம்ப்- புதின் இடையே நேரடியாகச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு நல்ல விதமாகப் போனதாகச் சொன்னாலும் கூட இதுவரை போர் முடியவில்லை. இந்தத் தற்காலிகப் பின்னடைவுகள் இருந்தாலும் கூட உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் முடியும் என வான்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தால் கிடைக்கும் வருவாயைக் குறைக்கவே, இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கொடுத்த விளக்கம்
அவர் மேலும் கூறுகையில், "ரஷ்யா தங்கள் எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து பணத்தைத் திரட்டுவதைத் தடுக்கவே, டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. அமெரிக்கா நிச்சயம் அமைதியை ஏற்படுத்தும். கடந்த சில வாரங்களில் இரு தரப்பிலிருந்தும் நம்பிக்கை தரும் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
ரஷ்யா போரை நிறுத்தினால், உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் இணையலாம் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தினார். ஆனால் அவர்கள் போரை நிறுத்தவில்லை என்றால் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்றும் வான்ஸ் கூறினார்.

இந்தியாவுக்கு மட்டும் வரி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது அமெரிக்கா வரி விதித்துள்ளது. இந்த வரியால் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இந்தியாவுக்கு வரி விதித்தாலும் கூட ரஷ்யக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மிகப் பெரிய இறக்குமதியாளர்களான சீனா மற்றும் ஐரோப்பா மீது அமெரிக்கா இதே போன்ற விமர்சனங்களை அமெரிக்கா முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா இந்தியாவின் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரியை அறிவித்தது. இதில் இந்தியாவின் ரஷ்யக் கச்சா எண்ணெய் கொள்முதலுக்கான தண்டனையாக 25% கூடுதல் வரியும் அடங்கும். ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாக அமெரிக்கா சொல்கிறது. ஆனால், இதை மறுக்கும் இந்தியா, நாட்டின் எரிசக்தி கொள்முதலைப் பூர்த்தி செய்யவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகத் தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கர் திட்டவட்டம்
முன்னதாக இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "இது மிகவும் விசித்திரமானது. இந்தியாவிடமிருந்து எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் உலக நாடுகளுக்குச் சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாம். யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஐரோப்பா வாங்குகிறது, அமெரிக்கா வாங்குகிறது" என்று மறமுமாகப் பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications