அதிதீவிர “சைவ” உணவுமுறை.. குழந்தையின் உயிர் பறித்த தாய்! ஆயுள் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு குடும்பத்தினர் வீகன் எனப்படும் அதிதீவிர சைவ உணவு முறையை பின்பற்றியதால் குழந்தை ஊட்டச்சத்து இன்றி இறந்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தாவர பொருட்களை மட்டுமே உண்ணும் சைவம் மற்றும் தாவரங்கள், மாமிசங்களை சாப்பிடும் அசைவம் என்ற 2 உணவு முறைகளை கேள்விப்பட்டும் பின்பற்றியும் வருகிறோம். ஆனால், பெரும்பாலானோர் அசைவ உணவு முறையையே பின்பற்றுகிறோம்.
இதில் சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வார்கள். சிலர் முட்டை கூட சாப்பிடுவார்கள். ஆனால், மாமிசங்கள் மட்டுமின்றி பால், தயிர் போன்ற விலங்குகளில் இருந்து வரும் அனைத்தையும் ஒதுக்கி காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிடும் உணவு முறை ஒன்று உள்ளது.
அதுதான் வீகன். இதை பின்பற்றுபவர்களை அதிதீவிர சைவம் என்றும் அழைக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்க தம்பதி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரல் பகுதியை சேர்ந்தவர்கள் ஷீலா ஓ லெரி, ரைய் தம்பதி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக வீகன் எனப்படும் அதிதீவிர சைவ உணவு முறையை பின்பற்றி வந்துள்ளனர். தாங்கள் மட்டுமின்றி தங்களுடைய குழந்தைகளையும் வீகன் உணவு முறையை பின்பற்ற கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.

குழந்தை மரணம்
இந்த தம்பதிக்கு எஸ்ரா என்ற 18 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்திருக்கிறது. அந்த குழந்தைக்கும் தாய்ப்பாலை, பச்சை பழங்கள், பச்சை காய்கறிகளை மட்டுமே உணவாக அளித்து வந்திருக்கின்றனர். குழந்தைக்கு பெரும்பாலும் ஆப்பிள், மாம்பழத்தையே அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 18 மாத குழந்தை எஸ்ரா ஊட்டச்சத்து குறைபாட்டால் மூச்சுத்திணறி உயிரிழந்தது.

தீவிர வீகன்
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோதுதான் குடும்பத்தினர் வீகன் உணவு முறையை தீவிரமாக பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. இறந்த குழந்தையையும் தங்களைபோல் வீகன் உணவு முறைக்கு அவர்கள் பழக்கப்படுத்தி இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மற்ற குழந்தைகள்
இதனை தொடர்ந்து அவர்களின் மற்ற 3 குழந்தைகளுக்கும் உடல்நல பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 3 குழந்தைகளுமே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தம்பதியின் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆயுள் தண்டனை
இதனை அடுத்து தாய் ஷீலா ஓ லெரி மற்றும் தந்தை ரைய் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதில் குழந்தையின் தாய் ஷீலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு சைவ உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications