ஜாம்பி வைரஸ்.. இமயமலையில் 41,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள்.. இப்போ பரவினாலும் சர்வ நாசம்! பகீர்
வாஷிங்டன்: இமயமலையில் உள்ள சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கவும் உலகெங்கும் பரவும் ஆபத்தும் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். விரிவான ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து நாம் பார்க்கலாம்.
கொரோனா நமது ஒட்டுமொத்த உலகையும் எப்படிப் புரட்டிப் போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் மொத்தமாக முடங்கிப் போனது.

ஜாம்பி வைரஸ்: அதில் இருந்து மீண்டு வருவதே பெரிய போராட்டமாகப் போனது. இதற்கிடையே சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 60 ஆய்வாளர்கள் பகீர் கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்துள்ளனர். இந்த ஆய்வாளர் குழு இமயமலையில் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டறிந்துள்ளனர். அதாவது வடமேற்கு திபெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையைச் சேகரித்துள்ளனர். அந்த பனிப்பாறையை ஆய்வு செய்த போது தான் மனிதர்களுக்கு இதற்கு முன்பு தெரியாத சுமார் 1,700க்கும் மேற்பட்ட வைரஸ் மரபணுக்கள் அதில் இருப்பது தெரிய வந்தது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 மீட்டர் உயரத்தில் இந்த பனிப்பாறைகள் இருப்பதால், பல்வேறு காலகட்டங்களில் இருந்த வைரஸ்கள் இங்கே உறைந்துவிடுகின்றன. அப்படி உறைந்து போய் கிடந்த வைரஸ்களை தான் ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இது குறித்த விரிவான ஆய்வு ரிப்போர்ட் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
9 காலகட்டங்கள்: இந்த பனிப்பாறையில் இருந்த வைரஸ்கள் ஒன்பது வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. ஒரு ஸ்பெஷல் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் பனிப்பாறையைத் துளையிட்டுள்ளனர். சுமார் 300 மீட்டர் துளையிட்டு அதிகாரிகள் பனியைச் சேகரித்த நிலையில், அதில் தான் இத்தனை வைரஸ்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது குறித்து வைராலஜிஸ்ட் மேத்யூ சல்லிவன் கூறுகையில், "பனிக்கட்டியைச் சேகரிப்பது சவாலின் ஒரு பகுதி மட்டுமே.. அங்கே 300 மீட்டர் ஆழத்தில் பனி மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. வெளியே எடுத்த உடன் அதில் இப்போது இருக்கும் வைரஸ்கள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக அதைத் தனி பிரத்தியேக பாக்ஸில் வைத்தோம். பனிப்பாறையை உறைந்ததும் மிகக் கவனமாக ஆய்வு செய்தோம். அதில் தான் வைரஸ்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
கடந்த காலங்களில் நாம் பனி சேகரித்த இடங்களில் குளிரும் இருந்துள்ளது வெயிலும் இருந்துள்ளது. எனவே, வெவ்வேறு காலநிலைகளை வைரஸ்கள் எப்படி எதிர்கொள்ளும் என்பதைப் புரிந்து கொள்ளவும் இது உதவி இருக்கிறது. இந்த வைரஸ்களை ஆய்வு செய்வதன் மூலம் கடந்த கால காலநிலை மாற்றங்களை வைரஸ் எப்படிச் சமாளித்து இருக்கிறது என்பதில் நமது புரிதல் மேம்படுகிறது" என்றார்.
கவலை: நமது பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த பண்டைய வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கும் ஆபத்தும் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக இந்த ஜாம்பி வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கலாம் என்றும் இது உலகம் முழுவதும் பரவி மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஒரு தரப்பினர் எச்சரிக்கிறார்கள். எதிர்காலத்தில் அவை பரவாமல் தடுப்பதற்கும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் பழைய வைரஸ் குறித்துக் கவலைப்படுவதை விட, புதிய வைரஸ்கள் உருவாகாமல் இருக்கவும் அதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications