அமெரிக்காவிலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.. சான்பிரான்சிஸ்கோவில் திரண்ட தமிழர்கள்!
வாஷிங்டன்: தமிழ்நாட்டில் மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் தமிழ்நாட்டு தமிழர்கள் பெருந்திரளாக ஒன்று கூடி கண்டனப் போராட்டம் நடத்தினர்.
புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டு மீது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கிறது; மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறது மத்திய பாஜக அரசு. இதனால் தமிழ்நாட்டின் 40 லட்சம் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படும் பேரபாயம் உருவாகி உள்ளது.

மத்திய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் பல இடங்களில் ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டு தமிழர்களும் தமிழ்நாடு மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பெருந்திரளாக ஒன்று கூடிய தமிழ்நாட்டு தமிழர்கள், மத்தியில் ஆளும் பாஜகவின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, திணிக்காதே! திணிக்காதே! இந்தியை திணிக்காதே! பறிக்காதே பறிக்காதே! தமிழரின் கல்வி உரிமையை பறிக்காதே என முழக்கமிட்டனர். மேலும், நாங்கள் தமிழ்நாட்டை விட்டு அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மீதான இந்தி மொழி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஒரு மொழியை திணிப்பதாலேயே மொழி அறிவு வந்துவிடாது; அறிவு என்பதும் புலமை என்பதும் வெவ்வேறானது; தமிழ்நாட்டை விட்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறோம்; ஆனால் தமிழ் மொழியை நாங்கள் விட்டுவிடவில்லை. எங்களுக்கும் தமிழ் மொழிக்குமான உறவு காலந்தோறும் நீடிக்கக்கூடியதுதான் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications