மோடி அற்புதமான நபர்.. இந்தியாவுடன் விரைவில் சிறந்த ஒப்பந்தம்.. பாராட்டி தள்ளிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே வலுவான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பிக்கை தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அற்புதமான தலைவர் என்று பாராட்டினார். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சு இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அற்புதமான தலைவர் என்று பாராட்டினார்.

உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்திய ஊடகங்கள் மத்தியில் பேசிய டிரம்ப், இந்தியாவும் அமெரிக்காவும் சாதகமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும். "உங்கள் பிரதமர் மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்" என்றார்.
இந்தியாவை வரி அரசன் என்று கடுமையாக விமர்சித்து வந்த டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை கண்டித்த டிரம்ப், அதற்காகவும் 25 சதவீதம் வரியை விதித்திருந்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சும் தடைபட்டது.
அடுத்த கட்ட வர்த்தக பேச்சு
இதையடுத்து, இரு நாடுகளும் வர்த்தக பேச்சு மூலம் வரி பிரச்சினையை சரிகட்ட ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும், இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த சூழலில்தான் டிரம்ப் விரைவில் சிறந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த கட்ட வர்த்தக பேச்சு நாளை நடைபெற உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்.
2030 ஆம் ஆண்டுக்குள்
அப்போது, வர்த்தகம், முக்கியமான கனிமங்கள், அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவும் அமெரிக்காவும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளன.
வர்த்தக இடைவெளியை குறைக்கும் விதமாக அமெரிக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் கொள்முதல் செய்ய இந்தியா உறுதி அளித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டாமல் தோல்வி அடைந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக விவகாரத்தில் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.












Click it and Unblock the Notifications