புதினை கட்டியணைத்து பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி.. அப்செட் ஆன அமெரிக்கா.. என்ன தான் பிரச்சினையாம்!
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ரஷ்யா சென்று அந்நாட்டின் பிரதமர் புதினை சந்தித்திருந்தார். இதற்கிடையே பிரதமர் மோடியின் இந்த பயணம் அமெரிக்காவில் உள்ள பல மூத்த அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தனது இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றிருந்தார். அப்போது எல்லா காலத்திலும் இந்தியாவுக்கு ரஷ்யா நண்பராக இருந்துள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் புதினை நண்பர் எனக் குறிப்பிட்டுப் புகழ்ந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா நட்புறவு அடுத்த கட்டத்திற்கு புதின் எடுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டு புதினை அவர் பாராட்டினார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவருக்கு ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதும் புதின் அரசால் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி: இந்தியா ரஷ்யா இடையேயான உறவில் பிரதமர் மோடியின் இந்த பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பயணம் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேட்டோ மாநாடு நடக்கும் போது ரஷ்ய பயணத்தில் புதினை பிரதமர் மோடியைக் கட்டி தழுவியது அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டில் வெளியாகும் பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேட்டோ மாநாடு கடந்த ஜூலை 9 அன்று தொடங்கி ஜூலை 11 அன்று முடிந்தது.
உக்ரைன் போர் ஆரம்பித்த பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறையாகும். இது இந்தியா- அமெரிக்கா உறவு குறித்த விமர்சனங்களை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த பயணம் அமெரிக்க அரசுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக பைடன் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா அதிருப்தி: அதாவது அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் சரியாக நேட்டோ மாநாடு நடக்கும் போது, அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக அறியப்படும் இந்தியப் பிரதமர் ரஷ்யா சென்று புதினை சந்தித்துள்ளது பைடன் நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ உச்சி மாநாடு நடக்கும் அதே தேதியில் மோடி- புதின் சந்திப்பு நடந்துள்ளது. இந்தத் தேதியை மாற்றி அமைக்க உள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியிருந்த போதிலும் அதே நாளில் நடந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
என்ன சொன்னார்: அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி கூட, நேற்று முன்தினம் டெல்லியில் பேசும் போது பிரதமர் மோடி- புதின் சந்திப்பை மறைமுகமாக விமர்சித்தார்.. என்ன நடந்தாலும் அமெரிக்கா உடனான நல்லுறவு தொடரும் என இந்தியா கருதக் கூடாது என அவர் கூறியிருந்தார். அதேபோல அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும் இந்தியாவை எச்சரித்தார்.
அதாவது ரஷ்யாவை நீண்டகால நண்பராக நினைப்பது தப்பாகிப் போக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்த ஜேக் சல்லிவன், ஒருவேளை இந்தியா சீனா இடையே பிரச்சினை வந்தால் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும் என்றும் கூறினார்.
எச்சரிக்கை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீண்ட கால, நம்பகமான நண்பராக ரஷ்யாவைக் கருதுவது சரியான முடிவு இல்லை என்பதை இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ரஷ்யா சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது. எனவே, ரஷ்யா எப்போதும் இந்தியாவை விடச் சீனா உடனான நட்புறவுக்கே முக்கியத்துவம் தருவார்கள். பிரதமர் மோடி இது குறித்து யோசிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications