அமெரிக்காவில் ஒரே அணியில் திரண்ட இந்திய & சீன மாணவர்கள்.. டிரம்ப்பிற்கு சிக்கல் தான்! அடுத்து என்ன!
வாஷிங்டன்: டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற விதிகளால் அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே டிரம்ப்பிற்கு எதிராகப் போராட அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுடன் சீன மாணவர்கள் கைகோர்த்துள்ளனர். இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக இப்போது டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். அவர் பதவிக்கு வந்த நாள் முதலே வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் டிரம்ப் நிர்வாகம் கெடுபிடி காட்டி வருகிறது.

டிரம்ப்
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் அச்சத்தில் உள்ளனர். சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களும் கூட எங்கு தாங்கள் நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்தில் உள்ளனர். ஏனென்றால் சிறு சிறு விதிமீறல்களுக்கும் கூட டிரம்ப் நாடுகடத்தல் நடவடிக்கை எடுத்து வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
அங்கு F-1 மாணவர் விசா மூலம் அமெரிக்காவில் படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூட உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. சிறு விதிமீறல்களில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்களைக் கூட நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு வருவதே சர்ச்சைக்குக் காரணமாகும்.
இந்தியா+ சீன மாணவர்கள்
இதற்கிடையே டிரம்ப்பின் நாடு கடத்தலுக்கு எதிராக இந்திய மாணவர்கள் சட்டப் போராட்டத்தை நடத்தி வந்த சூழலில், அதோடு இப்போது சீன மாணவர்களும் இணைந்துள்ளனர். ஏற்கனவே 3 இந்திய மாணவர்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், இப்போது 2 சீன மாணவர்கள் அதோடு இணைந்துள்ளனர். மாணவர்களை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக இவர்கள் சட்டப்பூர்வமாகப் போராடுகிறார்கள்.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த ஐந்து பேரும் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர். டிரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் F-1 விசாக்களை ரத்து செய்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப் 1 விசா ரத்து செய்யப்படும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும் நாடுகடத்தல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
1000+ மாணவர்களுக்குச் சிக்கல்
அமெரிக்கா முழுக்க கடந்த இரண்டு மாதங்களாகவே மாணவர்களைக் குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 170 கல்வி நிறுவனங்களில் சுமார் 1,100 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் படிக்கும் நிலையில், டிரம்ப் நடவடிக்கையால் அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கை மணிகாந்த பசுலா, லிங்கித் பாபு கோரேலா மற்றும் தனுஜ் குமார் கும்மடவெல்லி ஆகிய இந்திய மாணவர்களும் ஹங்ருய் ஜாங் மற்றும் ஹாயோயாங் ஆன் ஆகிய சீன மாணவர்களும் தொடர்ந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேருமே தவறாக அல்லது சிறு விதிமீறலுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். ஆனால், இப்போது நாடுகடத்த நடவடிக்கையை எதிர்கொள்கிறார்கள்.

என்ன காரணம்
அதில் பசுலாவை பொறுத்தவரை அவர் அமெரிக்கா வந்த புதிதில் சைலென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்திருந்தனர். இருப்பினும், அவர் வசிக்கும் நியூ ஹாம்ப்ஷயரில் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்கு வந்த 60 நாட்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமையைப் பயன்படுத்தலாம். பசுலா அப்போது அமெரிக்கா வந்து 60 நாள் ஆகியிருக்கவில்லை. இருப்பினும், அவர் குற்றம் செய்ததாகச் சொல்லி அவருக்கு $248 அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு இவர் அமெரிக்க லைசன்ஸும் பெற்றுவிட்டார்.
ஆனால், இந்த 250 டாலர் பைனை தான் பெரிய குற்றமாகக் கருதி டிரம்ப் நிர்வாகம் இப்போது இவரது விசாவை ரத்து செய்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இவர் படிக்கும் ரிவியர் பல்கலைக்கழகத்திலிருந்து பசுலாவுக்கு ஒரு மெயில் வந்தது. அதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல மும்பையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகமும் இதுபோன்ற மெயிலை அனுப்பி இருந்தது. அதில் உரிய விசா இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அபராதம் விதிக்கப்படும்.. கைது செய்யப்பட்டு நாடுகடத்தல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்திய மாணவர்கள்
தனுஜ் மற்றும் கோரேலா மீதான குற்றச்சாட்டுகளும் இதுதான்.. அவர்களுக்கும் அமெரிக்கா வந்து 60 நாட்களில் உரிய லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாகச் சொல்லி அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களும் பைன் கட்டிவிட்டு, அமெரிக்க ஓட்டுநர் உரிமையைப் பெற்றுள்ளனர். ஆனால், அதைக் காரணமாகச் சொல்லி இப்போது அவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில் கோரேலாவின் படிப்பு அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. பசுலா மற்றும் தனுஜ் ஆகியோருக்கு இன்னும் ஒரு செமஸ்டர் மட்டுமே இருக்கிறது. அமெரிக்காவில் படிக்க இவர்கள் குடும்பத்தினர் ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவழித்துவிட்ட நிலையில், இப்போது கடைசி நேரத்தில் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன மாணவர்கள்
சீன மாணவரான ஜாங்கை பொறுத்தவரை ஒரு தவறான புரிதலின் காரணமாக ஏற்பட்ட ஒரு சம்பவத்திற்காக ஜாங் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் உரிய காப்பீடு இல்லாமல் வண்டி ஓட்டியதாக ஹாயோயாங்கிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். இரண்டு வழக்குகளும் அப்போது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், இப்போது அவர்களின் மாணவர் விசாவையும் டிரம்ப் தரப்பு ரத்து செய்துள்ளது.
திடீரென இப்படித் தங்கள் மாணவர்கள் தங்கள் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது கடுமையான நிதி ஆளாக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் பயிற்சி முறையிலும் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏன் முக்கியம்
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதில் நீதிபதியின் உத்தரவு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவில் படிக்கும் பல ஆயிரம் இந்தியர்கள் டிரம்ப் நடவடிக்கையால் அச்சத்தில் உள்ளனர். சிறு விதிமீறல் அல்லது தவறாகக் கைது செய்யப்பட்டதற்கும் நாடுகடத்தப்படுவோமோ என்று பயப்படுகிறார்கள். இந்தச் சூழலில் நீதிமன்ற உத்தரவு டிரம்ப்பிற்கு எதிராக வந்தால் அது இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையே தரும்.












Click it and Unblock the Notifications