எலான் மஸ்க் மிச்சப்படுத்தும் பணத்தில் 20% மக்களுக்கு கொடுப்போம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரரும் அமெரிக்க அரசின் செயல்திறன் நிர்வாகத் துறையின் தலைவருமான எலான் மஸ்க் துறையிலிருந்து சேமிக்கப்படும் பணத்தில் இருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கர்களுக்கு கொடுப்பது குறித்து பரிசீலிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், பதவியை பிடித்ததும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர்களும் இந்த நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதிபர் தேர்தலின் போது தனக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து பிரசாரம் மற்றும் நிதி உதவி செய்த உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்கிற்கு டிரம்ப் முக்கிய பொறுப்பை தனது நிர்வாகத்தில் கொடுத்தார். அதாவது, அமெரிக்க அரசின் செயல்திறன் துறை என்கிற புதிய துறையை உருவாக்கிய டிரம்ப் அதன் தலைவராக எலான் மஸ்கை நியமித்தார்.
அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீண் செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை புதிய துறையின் பணியாகும். எனவே, எலான் மஸ்க் தலைமையிலான இந்த துறை செலவினங்களை குறைப்பதாக கூறி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி வருகிறது. இதில், இந்தியாவுக்கு வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் நிதியும் அடங்கும்.
இந்தியா மட்டும் இன்றி வங்கதேசம், பாகிஸ்தான் என பல நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிதி உதவியை நிறுத்தியதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வரும் டிரம்ப், நிறுத்தப்பட்ட நிதியினால் மிச்சப்படுத்தப்படும் பணத்தில் 20 சதவீதம் அமெரிக்க மக்களுக்கே கொடுக்கலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளார். சவுதி அரேபியா ஏற்பாடு செய்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையில் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப் கூறியதாவது:-
ஒரு புதிய முடிவு எடுப்பது குறித்து நான் பரிசீலித்து வருகிறேன். அரசாங்க செயல் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கவும், மீதமுள்ள 20 சதவீதத்தை 36 டிரில்லியன் கடனை அடைக்கவும் பயன்படுத்த பரிசீலிக்கிறேன். பல பில்லியன் டாலர் சேமிக்கப்படுகின்றன. எனவே 20 சதவீதத்தை அமெரிக்க மக்களுக்குத் திருப்பித் தருவது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம்" என்றார். தேர்தல் பிரசாரத்தின் போது, 2 டிரில்லியன் டாலரை தன்னால் சேமிக்க முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். எனினும், இந்த மதிப்பீட்டை அவர் மாற்றினார்.












Click it and Unblock the Notifications