இன்று ஹாலோவீன்கள் தினம்! பேய்களுக்கு ஏன் திருவிழா? மகாளய அமாவாசையுடன் தொடர்பு.. சுவாரஸ்ய தகவல்கள்
வாஷிங்டன்: ஹாலோவீன் திருவிழா எனும் பேய்களுக்கான திருவிழாவின் வரலாறு தெரியுமா? பேய்களுக்கு ஏன் திருவிழா நடத்தப்படுகிறது தெரியுமா?
காதலர் தினம், குழந்தைகள் தினம், முதியோர்கள் தினம், பெண் குழந்தைகள் தினம், ஆண்கள் தினம், பெண்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் உள்ளிட்டவை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பேய்களுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் பேய்கள் திருவிழா எனும் ஹாலோவீன் டே அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழா, தேவாலயங்களில் பணியாற்றி இறந்த புனித துறவிகளுக்கு விழா கொண்டாடுவதற்கு முன்பு நடக்கும். நாளை முதல் புத்தாண்டு பிறப்பதாகவே மக்கள் நம்புகிறார்கள்.
இந்த பேய்களுக்கான விழாவானது உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதில்லை. ஐரோப்பியாவிலும் வடஅமெரிக்காவிலும் அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த பூர்வகுடிகளாக அறியப்படும் செலிட்டிக் இனத்தவரால் வெயில் காலத்தை அறுவடை திருவிழாவாகவும், குளிர்காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் முன்னோர்களிடம் தங்களை இணைத்துக் கொள்ளும் விழாவாகவும் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
அகால மரணமடைந்தவர்களின் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது என்கிறார்கள். முதல் முறையாக பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாளில்தான் இந்த ஹலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்த நாள் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு பேய் வேஷம் போட்டு வீடு வீடாக போய் சாக்லேட்டுகளை சேகரித்து வர வைக்கிறார்கள். இந்த விழாவுக்கு பூசணிக்காய் முக்கியமானதாகும். பூசணிக்காயில் விளக்கேற்றி கொண்டாடுகிறார்கள்.
சம்ஹைன் திருவிழாவில் இருந்து வந்ததுதான் ஹாலோவீன் திருவிழா. இந்த சம்ஹைன் திருவிழா பழங்கால பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாட்டில் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த திருவிழாவை கொண்டாடினால், இறந்தவர்கள் நம் வீட்டுக்கு திரும்பி வருவார்கள் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அது போல் இந்த சம்ஹைன் திருவிழாவுக்கு அடுத்த நாள் நவம்பர் 1 ஆம் தேதி புத்தாண்டாக கருதப்படுவதால் அந்த ஆண்டு இறப்பவர்கள் வேறு உலகத்திற்கு செல்வார்கள் என்றும் நம்பப்படுகிறது.
இந்த ஹாலோவீன் தினத்தில் வீட்டை அலங்கரித்து விதவிதமான உணவை சமைத்து வைத்து நம் முன்னோர்களின் ஆத்மாக்களை வீட்டுக்கு வரவேற்பார்கள். சிலர் பேய்கள் போல் உடைகளை அணிந்து கொள்வார்கள். சிலர் தங்கள் வீடுகளில் பேய் படங்களை போட்டு பார்ப்பார்கள், பேயை மையப்படுத்தி விளையாட்டுகளையும் விளையாடுவர்.
சிலர் தங்கள் வீட்டையே பேய் வீடு போல் மாற்றுவர். இந்த விழாவுக்கு சில ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கிறார்கள். இந்த திருவிழாவை கொண்டாடுவதால் பேய், பிசாசுகள், கெட்ட சக்திகள் நம்மை அண்டாது என்ற ஒரு நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த விழா முழுவதுமே திகிலுடனும் அதே வேளையில் கொண்டாட்டங்களுடனும் இருக்கும். சுருக்கமாக சொல்ல போனால் மஹாளயபட்சம் 10 நாட்களும், மஹாளய அமாவாசை அன்றும் இறந்த முன்னோர்கள் நம் வீடுகளுக்கு வருவார்கள் என சொல்வது வழக்கம்.
அதாவது புரட்டாசி மாதங்களில் மஹாளயபட்சம் வரும். அந்த காலத்தில் எமதர்ம ராஜா நம் பிதுருக்களுக்கு விடுமுறை கொடுத்து அனுப்புவாராம். அவர்கள் பூலோகத்தில் நம் வீட்டுக்கு வரும் போது அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து அவர்களை வரவேற்க வேண்டும். அவர்களுக்கு நம் குலம் தழைக்க ஆசி வழங்கிவிட்டு செல்வார்கள் என்ற ஐதீகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications