டிரம்ப் ஆதரவாளர் சார்லி சுட்டு கொலை! துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசும்போதே பாய்ந்த குண்டு! பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான கிர்க் யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த சூழலில், அப்போது தான் இந்த மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. அவரது மரணத்திற்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஒருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள். அங்குத் துப்பாக்கி வைத்திருக்கப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. மேலும், துப்பாக்கிகள் மிக ஈஸியாகவும் கிடைக்கிறது. இதனால் துப்பாக்கிச் சூடுகளும் வன்முறைச் சம்பவங்களும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

துப்பாக்கி கலாச்சாரம்
கடந்தாண்டு கூட இதுபோல தான் டிரம்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்தார். துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தாலும் கூட அதை நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லை.
டிரம்ப் ஆதரவாளர் உயிரிழப்பு
இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான கிர்க் யூட்டா வேலி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது கேள்வி பதில் நிகழ்வில் சார்லி பங்கேற்று இருந்த நிலையில், திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே பிளவுகள் அதிகரித்துள்ளன. இடதுசாரி மற்றும் வலதுசாரி இயக்கங்கள் இரண்டிலும் அரசியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா எந்தளவுக்கு ஆபத்தான ஒரு போக்கை நோக்கிச் செல்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.

டிரம்ப் இரங்கல்
அவரது மரணத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவின் இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட சிறப்பாகப் புரிந்து கொண்டவர் வேறு யாரும் இல்லை. அவர் அனைவராலும் விரும்பப்பட்டார், பாராட்டப்பட்டார்.. எனக்கும் தனிப்பட்ட முறையில் அவரை பிடிக்கும்.. ஆனால், இப்போது அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். சார்லி, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து அமெரிக்க கொடிகளையும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கிய எஃப்.பி.ஐ இது தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
பெருந்திரளாக திரண்ட கூட்டத்தில் சார்லி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு சார்லி பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவே சார்லி கழுத்தில் கைவைத்தபடி சரிந்தார். நொடிகளில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மக்கள் கூட்டமும் தெறித்து ஓடியது. இது தொடர்பான பகீர் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications