"இந்தியா ரொம்ப வரி போடுது.." வெடியாக வெடித்த டிரம்ப்! அடுத்து சொன்ன பாயிண்டு.. அலறும் உலக நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப், தங்கள் நாட்டின் மீது வரி விதிக்கும் அனைத்து நாடுகள் மீதும் பதிலடி கொடுக்கும் வகையில் வரி விதிக்கப் போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரவுள்ளது. இதற்கிடையே திடீரென அவர் இந்தியா குறித்து சில கருத்துகளைப் பேசியுள்ளார். அவர் சொன்ன பாயிண்டுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிட்டதட்ட ஒரு வர்த்தக போரையை ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே அவர் சீனா மற்றும் தனது அண்டை நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இத்தோடு நில்லாமல் ரெசிப்ரோகல் வரி முறையையும் கொண்டு வரப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதாவது ஒரு நாடு அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ.. இனி அமெரிக்காவும் அதே அளவுக்கு வரி விதிக்கும் என்பதே இதன் நோக்கம்.

வரி விதிக்கும் டிரம்ப்
இதற்கிடையே இந்தியாவின் வரிகள் அதிகமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரிகள் குறித்து டிரம்ப் பேசுவது இது முதல்முறை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவின் வரிகள் குறித்து டிரம்ப் பேசியிருந்தார். இப்போது சில நாள் இடைவெளியில் மீண்டும் டிரம்ப் இந்திய வரிகள் குறித்துப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வரிகள் அதிகம்
டிரம்பின் ரெசிப்ரோகல் வரி முறை ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் சூழலில், மீண்டும் அவர் இதுபோல கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஓவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், "ஏப்ரல் 2ஆம் தேதி ரெசிப்ரோகல் முறை வரிகள் விதிக்கப்படும். இந்தியா அல்லது சீனா யாராக இருந்தாலும் ரெசிப்ரோகல் வரி தான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியா மிக அதிக வரி விதிக்கும் நாடாகவே உள்ளது.
மேலும், கனடாவும் கூட அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. அதில் குறிப்பாக நாம் கனடாவை சொல்லலாம். பால் தொடங்கிப் பல பொருட்களுக்கு அவர்கள் வரி விதிக்கிறார்கள். நமது இறக்குமதிக்குக் கனடா 250% வரி விதிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை நான் அறிவித்த வரிகள் எல்லாம் சிறியவை தான். ஏப்ரல் 2ம் தேதி தான் ரியல் வரியே ஆரம்பிக்கப் போகிறது.
உலக நாடுகள் எங்களை ஏமாற்றுகின்றன
ஏனென்றால் உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் எங்களை ஏமாற்றிவிட்டன. இப்போது உலகின் பல நாடுகளும் எங்களிடம் இருந்து 150- 200% வரை வரி வசூலிக்கிறார்கள்.. ஆனால், நாங்கள் அவர்களுக்கு எந்தவொரு வரியையும் விதிக்கவில்லை. இனி இந்த நிலைமையை மாற்றப் போகிறோம். அவர்கள் எங்களிடம் என்ன வசூலிக்கிறார்களோ நாங்களும் அதே அளவுக்கு வரி போடப் போகிறோம். இதற்காக ஏப்ரல் 2ஆம் தேதியை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். இது பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்" என்றார்.
சர்வதேச வர்த்தகம்
டிரம்ப் இதுபோல வரிகளை ஆரம்பிப்பது வர்த்தக போரைத் தொடங்கும் என்றே வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே டிரம்பின் வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கனடா மற்றும் சீனா நாடுகள் வரிகளை அறிவித்துள்ளன. குறிப்பாக, சீனா அமெரிக்கா எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக அறிவித்துள்ளது. இதுபோல எல்லா நாடுகளும் வரி விதித்தால் அது ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி சர்வதேச வர்த்தகத்தை மொத்தமாக முடக்கம் என்றே அஞ்சப்படுகிறது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் கூட டிரம்பை விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "வரிகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும்.. இதுவும் கிட்டதட்ட ஒரு போர் நடவடிக்கை போன்றது தான். இவையே காலப்போக்கில் பல பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாகிவிடும். மக்களுக்கே கடைசியில் இது பிரச்சினையாக முடியும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications