அப்பாடி..இப்பதான் நிம்மதியா இருக்கு! சீனா, மெக்சிகோவை கதற விட்ட ட்ரம்ப்! இப்போதைக்கு தப்பிய இந்தியா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனே அதிரடி காட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். சீனா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு 'வர்த்தகப் போரை' தொடங்கிய நிலையில் அந்த பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இருப்பதாக கூறப்படுகிறது.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்காவின் பொருளாதார நலனை சீர்குலைப்பதாக சீனா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகள் மீது குற்றம் சாட்டி இருந்தார் ட்ரம்ப்.

இந்த நிலையில் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.
மேலும் டிரம்பின் நடவடிக்கைகள் சில இந்தியர்களுக்கு எதிராக இருப்பதாகவே கூறப்பட்டது. குறிப்பாக சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை வெளியேற்றுவது, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்டவை டொனால்ட் டிரம்ப் வைத்திருந்த திட்டங்களில் ஒன்றாக இருந்தது. காரணம் இந்தியா அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது ட்ரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் படவில்லை. ஏற்கனவே இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாகவும் அதனை மாற்றாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சீனா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டு அமைப்பில் இருக்கின்றன. இவை சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கள் சொந்த நாட்டு கரன்சிகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலை நீடித்தால் அந்த நாடுகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். மேலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும், அமெரிக்க மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் மீது வர்த்தக போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு இந்தியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே கையாண்டு வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வரும் 13ம் தேதி அமெரிக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடி அவரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 14ஆம் தேதி வரை அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கி பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள் உள்ளிட்டவர்களை சந்திக்கிறார். அப்போது அமெரிக்க அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகை காரணமாகவே வர்த்தக போரிலிருந்து இந்தியா தற்போதைக்கு தப்பி இருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications