வரி போட்டு வம்பில் சிக்கிய டிரம்ப்.. வறுமையை நோக்கி 10 லட்சம் அமெரிக்கர்கள்.. எப்படி? ஷாக் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அதேபோல் உலகில் உள்ள பல நாடுகளுக்கும் அவர் வரியை தீட்டி உள்ளார். இதனால் அதிகரித்த வரி வருவாய் வாயிலாக அமெரிக்கா கல்லா கட்ட தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் டிரம்பின் வரி விதிப்பு அமெரிக்காவுக்கே எதிரியாக மாறும், டிரம்பின் செயலால் சுமார் 10 லட்சம் அமெரிக்கர்கள் வறுமை நிலையை நோக்கி செல்ல உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் அடாவடியாக வரிகளை விதித்து வருகிறர். தங்களுடன் இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை கணக்கிட்டும், எதிரி நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை மதிப்பிட்டும் அவர் வரிகளை விதித்துள்ளார்.

நம் நாட்டுக்கு டிரம்ப் 50 சதவீத வரியை போட்டுள்ளார். அதேபோல் பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு 30 சதவீதம் வரி போடப்பட்டுள்ளது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் டிரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியை விதித்து விட்டார். இது உலக வர்த்தகத்தையே புரட்டிப்போட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. அதையும் மீறி பொருட்களை அனுப்பினால் கூடுதல் வரி செலுத்த வேண்டி உள்ளது. இதன்மூலம் அமெரிக்கா கல்லா கட்ட தொடங்கி உள்ளது. இப்படி பிற நாடுகளுக்கு கூடுதல் வரி போட்டு சுகம் காணும் டொனால்ட் டிரம்புக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் விதித்த கூடுதல் வரி அவரது தலையில் இடியை இறக்கி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தான். அதாவது டிரம்பின் வரி விதிப்பால் 10 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்பட உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, வெளிநாட்டினர் குடியேறுவது தடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்படும். இதன்மூலம் அமெரிக்காவை மீண்டும் வலுவான நாடாக மாற்றி இங்குள்ள மக்களின் வளமான வாழ்க்கைக்கு உறுதியளிப்பதாக கூறினார். ஆனால் தற்போது அவரது வரி விதிப்பால் 10 லட்சம் அமெரிக்கர்கள் வறுமையில் தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் யேல் பட்ஜெட் லேப் சார்பில் முக்கிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் 2026ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள். இதில் 3 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளும் அடங்கும். Pre tax Incomeஅடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிரம்பின் வரி விதிப்பு என்பது அமெரிக்க அரசுக்கு வரியாக வருவாயை உயர்த்தும். அதேவேளையில் குறைந்த சம்பளத்தில் வாழ்க்கை நடத்தும் மக்களை வறுமையில் தள்ளும். ஏனென்றால் அதிகப்படியான வரியால் அன்றாட தேவைகளுக்கான மளிகை பொருட்கள், ஆடைகளின் விலை அதிகரிக்கும். இந்த பொருட்கள் இதுவரை விலை குறைந்து கிடைத்து வந்த நிலையில் வரியால் அமெரிக்காவில் அதன் விலை எகிறும். இதுதான் சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) மக்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த வருமானத்தில் அமெரிக்காவில் வசிப்போர் வறுமையில் தள்ளப்பட உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இதுபற்றி பட்ஜெட் லேப்-பை சேர்ந்த ஜான் ரிகோ கூறுகையில், ‛‛வெளிநாடுகளின் மீதான Tariffs என்பது அமெரிக்க குடும்பங்களின் மீதான வரியாக தான் வருகிறது. மக்களின் வருமானத்தை உயர்த்தாமல் பொருட்களின் விலை உயரும்போது மக்கள் அதிகப்டுகின்றனர். இதனால் ஒவ்வொரு மக்களும் தங்களின் சம்பாத்தியத்தில் கூடுதல் பணத்தை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களுக்கு செலவிட வேண்டும். மேலும் இந்த ஆய்வு இன்னொரு முக்கிய விஷயத்தை காட்டுகிறது. டிரம்பின் வரி விதிப்புக்கு முன்பு அமெரிக்காவில் ஒட்டுமொத்த வறுமை விகிதம் 10.4 சதவீதமாக இருந்தது. இது டிரம்பின் வரி விதிப்புக்கு 10.7 சதவீதம் ஆக அதிகரிக்கும் என்று காட்டுகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications