உலக நாடுகள் மட்டுமில்லை.. அமெரிக்கர்களையும் ஓடவிட்டு அடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப்.. பரபர பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளை மிரட்டுவது மட்டுமின்றி, எலான் மஸ்க்குடன் சேர்ந்து அமெரிக்கர்களையும் ஓடவிட்டு அடிக்கும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்க அரசு துறையில பணியாற்றுவோர் கதி கலங்கி போய் நிற்கின்றனர்.
அமெரிக்கா.. உலகின் மிகப்பெரிய வல்லரசாக கம்பீரமாக உள்ளது. மேலும் மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் சக்தியாக அமெரிக்கா உள்ளது. இதனால் தான் ஒவ்வொரு முறை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்படியான நிலையில் தான் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்றார். ஜனவரி 20ம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று 16 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மொத்த உலகத்தையும் அலறவிட்டு வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாடு கடத்தி வருகிறார். முதற்கட்டமாக இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனைக்கு வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். சீனாவுக்கு 10 சதவீத வரியை நிர்ணயித்துள்ளார். இதுதவிர இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புக்கும் வரி விதிப்பதாக தெரிவித்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ ஒதுக்கப்படும் நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
அமெரிக்க அரசு சார்பில் யுஎஸ்ஏஐடி எனும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID or United States Agency for International Development) செயல்பட்டு வருகிறது. இந்த யுஎஸ்ஏஐடி மூலம் தான் பிற நாடுகளுக்கு உதவி என்பது வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ல் மட்டுமே 4 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியது. இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. இதனால் அவர் அதிபரான உடனேயே யுஎஸ்ஏஐடி சார்பில் வழங்கப்படும் நிதியுதவிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். அதோடு யுஎஸ்ஏஐடி சார்பிலான பணிகளை நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவின் பின்னணியில் தான் எலான் மஸ்க் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது எலான் மஸ்க் தேர்தல் சமயத்தில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் வெற்றி பெற வேண்டும் என்று கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கினார். தேர்தல் பிரசார மேடைகளில் டொனால்ட் டிரம்புடன் பங்கேற்றார். இதற்கு கைமாறாக டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார்.
புதிதாக DOGE என்ற பிரிவை டொனால்ட் டிரம்ப் உருவாக்கினார். DOGE என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்பது Department of Government Efficiency. தமிழில் கூற வேண்டும் என்றால் அமெரிக்காவின் செயல்திறன் துறை என்று கூறலாம். இதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த துறையின் பணி என்பது அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொள்வதாகும். தேவையில்லாத செலவை குறைப்பதில் இந்த துறை முக்கிய பங்காற்றும். இந்த DOGE துறை தலைவராக எலான் மஸ்க் ஆதாரங்களை திரட்டி டொனால்ட் டிரம்பிடம் வழங்கிய நிலையில் தான் USIAD மூலம் வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி டொனால்ட் டிரம்ப் , எலான் மஸ்க்கால் வெளிநாடுகள் மட்டும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. ஏனென்றால் அவர்கள் 2 பேரின் செயல்பாடு அமெரிக்கர்களையும் அலறவிட்டுள்ளது. அதாவது யுஎஸ்ஐஏடி பிரிவையே இழுத்து மூட இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக தான் யுஎஸ்ஐஏடி-யை சேர்ந்த அமெரிக்க பணியாளர்களிடம் தானாகவே ராஜினாமா செய்து விடுங்கள். இல்லாவிட்டால் லாங்க் லீவு எடுத்து ஓடிவிடுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஒரு பகுதியினர் இப்போதைக்கு ராஜினாமா வேண்டாம். லாங்க் லீவில் செல்வோம் என்று விடுப்பு எடுத்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் வாஷிங்டன் டிசியில் உள்ள யுஎஸ்ஏஐடிசியின் அலுவலகம் 2 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் அந்த அலுவலகம் திறக்கப்படவில்லை.
இதனால் அந்த யுஎஸ்ஏஐடிசியை மொத்தமாக இழுத்து மூட டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு யுஎஸ்ஏஐடி தற்போது தனி அமைப்பாக உள்ளது. அதாவது அரசு ஏஜென்சியாக இருந்தாலும் சுதந்திரமான (Independence Agency) அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மொத்தமாக கலைத்துவிட்டு வெளியுறவுத்துறை மூலம் வெளிநாடுகளுக்கு உதவி செய்வது பற்றிய சிந்தனை டொனால்ட் டிரம்பிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் யுஎஸ்ஏஐடிசி போல் இன்னும் சில துறை சார்ந்த அலுவலகங்களால் தேவையற்ற செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் எலான் மஸ்க் டீம் விசாரித்து வருகிறது. இதனால் அந்த அலுவலகங்களில் பணியாற்றும் அமெரிக்கர்களும் அச்சத்தில் உள்ளனர். டொனால்ட் டிரம்பும், எலான் மஸ்க்கும் சேர்ந்து இன்னும் என்னவெல்லாம் செய்யப்போறாங்களோ? என்ற பீதியில் அமெரிக்க அரசு சார் பிரிவுகளில் பணியாற்றி வருவோர் நடுங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications