"என் வேலை முடிந்துவிட்டது.."டிரம்ப் அரசியலில் இருந்து திடீரென விலகும் எலான் மஸ்க்.. என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக இப்போது எலான் மஸ்க் இருக்கிறார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தில் அரசு செலவுகளைக் குறைக்கும் டாஜ் துறைக்கும் தலைமை ஏற்றுள்ளார். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலகவுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இப்போது எலான் மஸ்க் இருக்கிறார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்திருந்தார். அங்குத் தொழிலதிபர்கள் குறிப்பிட்ட அதிபரை ஆதரிப்பது வழக்கமாக நடப்பது தான் என்றாலும் எலான் மஸ்க் அதையும் தாண்டி ஊர் ஊராகச் சென்று பிரச்சாரமும் செய்தார்.

டிரம்ப், எலான் மஸ்க்
இதன் காரணமாகவே டிரம்பின் குட் புக்கில் எலான் மஸ்க் இடம் பிடித்தார். மேலும், டிரம்ப் ஆட்சியை அமைத்த போது எலான் மஸ்க்கிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. குறிப்பாக எலான் மஸ்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் டாஜ் துறையும் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவது குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வரும் மே மாதத்திற்குப் பிறகு டாஜ் துறையில் இருந்து விலகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் பற்றாக்குறையை $1 டிரில்லியன் குறைத்து, தற்போதைய பெடரல் அரசின் செலவை சுமார் $6 டிரில்லியனாக குறைத்த பின்னர், மே மாதம் டாஜ் துறையில் இருந்து விலகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்
அங்குள்ள டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்காவின் பேலன்ஸ் ஷீட்டை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க அரசின் பற்றாக்குறையைப் பாதியாகக் குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தினசரி $4 பில்லியன் வரை செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
முதல் 130 நாட்களுக்குள் பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டாலர்கள் குறைக்கத் தேவையான பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல் நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்களின் நடவடிக்கையால் $4 பில்லியன் டாலர் சேமிக்க முடிகிறது. இதுவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தருவதாகவே இருக்கிறது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால் அமெரிக்கா கடனில் மூழ்கிவிடும்.
டிரம்ப் அரசியலில் இருந்து விலகல்
அமெரிக்க அரசு இத்தனை காலம் திறமையாகச் செயல்படவில்லை. தேவையற்ற செலவுகள் மற்றும் மோசடிகள் நிறைய இருந்தன. இதனால் எந்தவொரு முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல் 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் டாஜ் துறையில் இருந்து விலகிவிடுவேன்.
பணியாளர் குறைப்பு, சொத்து விற்பனை உள்ளிட்ட எங்கள் நடவடிக்கை மூலம் மார்ச் 24ம் தேதி வரை $115 பில்லியனை மிச்சப்படுத்தியுள்ளோம். வரும் காலத்தில் அமெரிக்க மக்களின் நலனை மேம்படுத்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆனால், அதற்குள் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வருகிறது. ஆனால், இதையெல்லாம் நாங்கள் எதிர்பார்த்தது தான்" என்றார்.
காரணம் என்ன
அதேநேரம் திடீரென டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் முடிவு ஏன் என்பது குறித்து காரணங்களை எலான் மஸ்க் விளக்கவில்லை. இருப்பினும், டாஜ் துறை எடுக்கும் நடவடிக்கைகளால் எலான் மஸ்க் மீது அமெரிக்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எலான் மஸ்கிற்கு எதிராகவும் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராகவும் நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
என்ன தான் டிரம்ப் எலான் மஸ்கிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலும் அமெரிக்க மக்கள் எலான் மஸ்க்கிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தே வருகிறார்கள். டெஸ்லா கார் விற்பனை சரிந்து வரும் நிலையில், டெஸ்லா பங்குகளும் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளன. இந்தச் சூழலில் தான் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் முடிவை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications