டிரம்ப் செய்த காரியம்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்? மாணவர்களுக்கு சிக்கல்
வாஷிங்டன்: டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர் பல்வேறு சட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களுக்குக் கெடுபிடி அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் சிக்கல் என்ன.. அங்குள்ள இந்திய மாணவர்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டியது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அங்குள்ள வெளிநாட்டினர் சிக்கல் மீது சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களும் கூட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் சிக்கல்
வெளிநாட்டினரின் கிரீன் கார்டுகள் ரத்து செய்யப்படுகிறது.. வேலை விசாக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.. மாணவர்களை நாடுகடத்த ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இப்படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் கவலைப்பட ஏற்கனவே ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இதற்கிடையே அடுத்த கட்டமாகச் சர்வதேச மாணவர்களின் விசாக்களை பல்வேறு காரணங்களைச் சொல்லி அமெரிக்கா ரத்து செய்து வருகிறது.
ஓவர் ஸ்பீட் உள்ளிட்ட சிறு விதிமீறல்களுக்குக் கூட சர்வதேச மாணவர்களின் விசாக்களை அமெரிக்கா இப்போது ரத்து செய்து வருகிறது. இதுபோல சிறு பிரச்சனைகளில் சிக்கும் மாணவர்களும் கூட அடுத்த 15 நாட்களில் அமெரிக்காவில் இருந்து சுயமாக வெளியேறிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்போது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு இருக்கும் சூழலில், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அவர்களைப் பாதிக்கும் வகையிலேயே இருக்கிறது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள்
2023-2024ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 11,26,690 சர்வதேச மாணவர்கள் படித்தாக ஓபன் டோர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு சுமார் 43.8 பில்லியன் டாலர் பங்களித்துள்ளார். மேலும், சர்வதேச மாணவர்களால் அமெரிக்காவில் 3,78,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்கள் F-1 விசாக்களுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதேநேரம் தொழில் படிப்பிற்காக அமெரிக்கா செல்வோருக்கு M-1 விசா வழங்கப்படுகின்றன. பரிமாற்ற திட்டம் மூலம் அமெரிக்கா செல்வோருக்கு J-1 விசா வழங்கப்படுகின்றன. இதுபோல அமெரிக்காவில் படிப்பிற்குச் செல்ல பல வழிகள் இருந்தாலும் சமீபத்திய மாதங்களில், மாணவர் விசாவுக்கு ஒப்புதல் வழங்கும் விகிதம் குறைந்துள்ளன. 2023 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2024 நிதியாண்டில் இந்தியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 34% குறைந்துள்ளது.

விசா ரத்து
இத்துடன் சேர்ந்து டிரம்ப் நிர்வாகம் இப்போது அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து வருகிறது. ஓவர்ஸ்பீட் உள்ளிட்ட சிறு விதிமீறல்களில் சிக்கும் மாணவர்களின் விசா கூட ரத்து செய்யப்பட்டு வருகிறது. இப்படிதான் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த 6 சர்வதேச மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் அங்குள்ள இந்திய மாணவர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் தங்கள் குடியேற்ற ஆவணங்களை எல்லா நேரங்களிலும் கையில் வைத்திருக்குமாறு கல்லூரிகள் அறிவுறுத்துகிறது. சிறிய விதி மீறல், சமூக வலைத்தள போஸ்ட் உள்ளிட்ட காரணங்களுக்காகக் கூட மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த திடீர் விசா ரத்து காரணமாகப் பல இந்திய மாணவர்கள் இப்போது சுயமாக நாடு கடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வழக்கறிஞர்கள் சொல்வது என்ன
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) மையத்திற்குச் சென்றால் நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், அதில் நமது கோரிக்கை பிராசஸ் ஆக நீண்ட காலம் ஆகும் என்பதால் அது செய்ய வேண்டாம். மேலும், இதற்கு ஆகும் செலவும் அதிகம். மேலும், ஒரு முறை உங்கள் மாணவர் விசா நிராகரிக்கப்பட்டால் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் பிராசஸை செய்ய மட்டுமே உங்களால் அமெரிக்காவில் இருக்க முடியும். அந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் அங்கு வேலை செய்யவோ, பயிற்சி பெறவோ முடியாது.
இந்திய மாணவர்கள் என்ன செய்யலாம்
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தளவுக்கு நிலைமை மோசமாக இறுக்கும் சூழலில் இந்திய மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களை அமெரிக்க நிர்வாக வழக்கறிஞர் ராஜீவ் கன்னா வழங்கியிருக்கிறார். மாணவர்கள் விசா செயல்முறையின் போது வரும் மெயில்களை கவனமாகக் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், கல்லூரிச் சேர்க்கை குறித்த ஆவணங்கள் மற்றும் கல்வி எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்த ஆவணங்களையும் ரெடியாக வைத்திருக்கக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மாணவர் விசாவில் அமெரிக்காவில் தங்கி இருப்போர், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினால் கூடுதல் சோதனைக்கு அதுவே வழிவகுக்கிறது. எனவே, வெளிநாட்டு மாணவர்கள் தேவையான அளவுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர் விசா ரத்தாகும் வாய்ப்பு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம்
இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (CIS) அலுவலகத்தையும் மூட டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அமெரிக்காவில் குடியேறுவோருக்கு விசா உதவிகளை இந்த சிஐஎஸ் அலுவலகம் தான் செய்து வந்த நிலையில், திடீரென அந்த அலுவலகத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இது அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரைக் கடுமையாகப் பாதிப்பதாகவே இருக்கிறது. கடந்த 2024ல் மட்டும் இந்த சிஐஎஸ் அலுவலகம் சுமார் 30,000 விண்ணப்பங்களை பிராசஸ் செய்துள்ளது.
விசா தவறுகளைச் சரி செய்வது, தாமதம் பற்றி விளக்குவது உள்ளிட்டவற்றை அவர்கள் கவனித்து வந்தார்கள். அந்த அலுவலகத்தைத் தான் மூட தடாலடியாக டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அது மட்டுமின்றி இரு குடியேற்றக் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் மூட டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விசாவில் ஏதேனும் சிக்கல் வந்தாலும் கூட அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் புகார் அளிக்கவே முடியாத சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவை இந்தியர்களே அதிகம் வைத்திருக்கும் சூழலில் இது அவர்களைத் தான் நேரடியாக அதிகம் பாதிக்கிறது.
சட்டமில்லாமல் டிரம்ப் செய்யும் சம்பவம்
விஷயம் என்னவென்றால் உலகமே அமெரிக்க அதிபர் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி குறித்தும் அதை அவர் திடீரென நிறுத்தி வைத்தது குறித்தும் தான் பேசி வருகிறது. ஆனால், சத்தமே இல்லாமல் டிரம்ப் நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் அச்சத்திலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications