H 1B விசா: டிரம்பால் நிற்கும் திருமணங்கள்.. கதறும் குடும்பங்கள்.. அமெரிக்காவில் அலறும் இந்தியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இதனால் திருமணம், தீபாவளி பண்டிகைக்காக நாடு திரும்ப தயாரான அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளனர். அதன்படி சிலரது திருமணமே நின்று உள்ளது. இதனால் அவரது குடும்பம் நொந்துப்போய் கதறி அழுவதாக சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கவாில் பணி செய்ய பயணிக்கும் வகையில் எச் 1பி விசா வழங்கப்படும். இந்த விசாவை பயன்படுத்தும்போது வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் 3 ஆண்டு அமெரிக்காவில் பணி செய்யலாம். அதன்பிறகு அதன் காலத்தை கூடுதலாக 3 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ள முடியும்.

அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தில் பயன்பெறும் வெளிநாட்டினரில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் தான். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக (1 லட்சம் டாலர்) உயர்த்தினார். இதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்ட டிரம்ப் வரும் 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்.
அதன்பிறகு அதுபற்றி எந்த விரிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் எச் 1 பி விசாவில் பணியாற்றுவோருக்கு பதற்றம் ஏற்பட்டது. எச் 1பி விசாவை வைத்திருக்கும் பல இந்தியர்கள் தீபாவளி பண்டிகை உள்பட பல்வேறு விசேஷங்களுக்காக இந்தியா திரும்ப தயாராக இருந்தனர். விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததோடு, விமான பயணத்துக்காக விமான நிலையத்துக்கும் சென்றிருந்தனர். ஆனால் டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பு அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி அமேசான், மைக்ரோசாப்ட் உள்பட பல்வேறு நிறுவனங்களின் தலைமையிடம் இருந்து எச் 1பி விசாக்களை பயன்படுத்தும் வெளிநாட்டினர் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டும். செப்டம்பர் 21ம் தேதிக்குள் அமெரிக்காவுக்குள் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தன. இதனால் தற்போது எச் 1பி விசா வைத்திருந்தாலும் சொந்த நாட்டுக்கு சென்று மீண்டும் அமெரிக்கா வரும்போது ரூ.88 லட்சம் செலுத்த கூறுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பலரும் தங்களின் பயணத்தை உடனடியாக ரத்து செய்தனர். அமெரிக்காவில் எச் 1பி விசாவில் பணியாற்றுவோரிடம் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே தான் இன்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது.
ஏற்கனவே எச் 1 பி விசா பயன்படுத்துவோருக்கு இந்த புதிய கட்டணம் பொருந்தாது. புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் எச் 1 பி விசாவை பயன்படுத்தி வசிப்போருக்கு நிம்மதியை கொடுத்தாலும் கூட இந்த தாமதமான விளக்கம் பலரது வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
ஏனென்றால் இந்த விசா ரூல் மாற்றத்தால் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை உடனடியாக அமெரிக்கா திரும்ப உத்தரவிட்டன. இதனால் பலரும் தங்களின் குடும்பத்தினரை விட்டு உடனடியாக பிரிந்து விமானம் ஏறினர். நீண்டகாலத்துக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்தவர்கள் தங்களின் விடுமுறையை பாதியில் கைவிட்டு அவசர அவசரமாக விமானம் ஏறினர். அதுவும் விமான டிக்கெட் பலமடங்கு வரை உயர்ந்தது. இதனால் பலரும் கண்கலங்கினர்.
‛சரமுச்' என்ற பெயரில் ரெடிட் தளத்தில் செயல்படும் நபர் கூறுகையில், ‛‛இரக்கம் இல்லாத உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு பிறகு என்னை என் அம்மா சந்திக்க தயாராக இருந்தார். ஒருவாரம் ஒன்றாக இருக்க போகிறோம் என்று நினைத்தோம். ஆனால் என் அம்மா இப்போது அழுகிறார். அதனை நீங்கள் பார்க்க வேண்டாம்'' என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் எச் 1பி விசாவில் பணியாற்றி வருகிறார். தனது குடும்பத்தினரை பார்க்க புறப்பட்ட நிலையில் விசா அறிவிப்பு வந்ததால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதேபோல் விமானங்களில் சொந்த நாடுகளுக்கு புறப்பட தயாராக இருந்தவர்கள் அவசரஅவசரமாக தங்களின் பயணங்களை ரத்து செய்தனர். இதற்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களிடம் இருந்து போன H-1B விசா ஊழியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்ற அறிவிப்பு தான் முக்கிய காரணமாகும்.
அந்த வகையில் சிலர் தங்களின் திருமணத்துக்காக சொந்த ஊர்களுக்கு கிளம்ப தயாராகி இருந்தனர். இப்போது அவர்கள் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனை பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இப்படி ஒரே நாளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச் 1பி விசா தொடர்பான அறிவிப்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து வெளிநாட்டினரையும் பதற வைத்துள்ளது. மேலும் அமெரிக்காவில் தொடர்ந்து தங்களின் வேலையை காப்பாற்றி கொள்ள முடியுமா? டிரம்ப் எப்போது எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என்று வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பதறிப்போய் உள்ளனர்.
***












Click it and Unblock the Notifications