90 லட்சம் கட்டணம்.. அமெரிக்க எச்-1பி விசா கனவு அவுட் என நினைத்தவர்களுக்கு செக்! டிரம்ப் வைத்த ஆப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்-1பி (H-1B) விசாவுக்கு 90 லட்சம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து, விண்ணப்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது.. இதன் காரணமாக, விசாவுக்குத் தேர்வாகும் விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 75 சதவீதம் வரை உயர்ந்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஜாக்பாட்டாக மாறியுள்ளது..
அமெரிக்காவில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்பப் பணிகளில் வெளிநாட்டினரைப் பணியமர்த்த எச்-1பி விசா என்பது மிக முக்கியமான நடைமுறையாகும்..

அதிபர் டிரம்ப் அதிரடி மாற்றங்கள்
ஆண்டுதோறும் 65,000 பொதுப் பிரிவு விசாக்களும், 20,000 அமெரிக்க முதுகலை பட்டதாரிகளுக்கான விசாக்களும் என மொத்தம் 85,000 விசாக்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.. இதற்கான விதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார்..
அதன்படி, அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து புதிதாகப் பணியமர்த்தப்படும் எச்-1பி பணியாளர்களுக்கு சுமார் 90 லட்சம் ரூபாய் (100,000 டாலர்) வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.. அதிபர் டிரம்பின் இந்த அதிரடி முடிவு, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பிய இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது..
இத்தகைய கடுமையான நிதிச் சுமை மற்றும் மிக அதிக கட்டணக் கட்டுப்பாடுகளால், அமெரிக்காவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் எச்-1பி விசாவுக்குப் பணம் செலுத்துவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டன..
எச்-1பி விசாவுக்கு விண்ணப்பங்கள்
குறிப்பாக, இவ்வளவு பெரிய தொகையை ஒரு பணியாளருக்காகச் செலவிடப் பல நிறுவனங்கள் முன்வராததால், அவர்கள் வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேடுவதையே தவிர்த்து வருகின்றனர்.. இதன் விளைவாக, வழக்கமாக எச்-1பி விசாவுக்கு ஆண்டுக்கு 7 லட்சம் விண்ணப்பங்கள் வரை குவியும் நிலையில், இந்த ஆண்டு 1.95 லட்சம் முதல் 2.35 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் குறைவான விண்ணப்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
விண்ணப்பங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்ததால், லாட்டரி முறையில் விசா தேர்வாகும் விகிதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் AI
முன்பு 33 சதவீதமாக மட்டுமே இருந்த தேர்வு வாய்ப்பு, இப்போது சராசரியாக 50 சதவீதத்தைக் கடந்து, சில உயர்மட்டப் பிரிவினருக்கு 75 சதவீதம் வரை எட்டியுள்ளது.. குறிப்பாக அதிக ஊதியம் பெறும் லெவல் 4 மற்றும் லெவல் 3 ஆகிய பிரிவுகளில் உள்ள பணியாளர்களுக்கு லாட்டரியில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது..
இப்போது அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன.. இதனால் நிறுவனங்கள் ஆரம்பக் கட்டப் பணியாளர்களை விட, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முதிர்ச்சி அடைந்த மூத்த பணியாளர்களை பணியமர்த்தும் நிலைக்கு மாறியுள்ளன..
90 லட்சம் ரூபாய் கட்டண உயர்வு
இது இந்தியாவிலிருந்து செல்லும் இளம் பொறியாளர்களுக்கு ஒரு சவாலான சூழலை உருவாக்கினாலும், அனுபவம் மற்றும் உயர் திறன் கொண்டவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது..
இந்த 90 லட்சம் ரூபாய் கட்டண உயர்வு தொடர்பான வழக்குகள் தற்போது அமெரிக்க கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.. இருந்தாலும் இப்போதைய தேர்வு விகிதம் தகுதியானவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.. தேவையற்ற மற்றும் போலியான விண்ணப்பங்களை ஒழித்து, உண்மையான திறமையாளர்களுக்கு மட்டும் வழிவிடும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றங்கள், உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறுகிறார்கள்...!!












Click it and Unblock the Notifications