நெற்றியில் திலகமிட்டு பணிபுரிய அனுமதி! அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளி வீரருக்கு ஆதரவு!
வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படையில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் நெற்றியில் திலகம் அணிந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர் 2 ஆண்டு காத்திருந்து கோரிக்கைகள் வைத்து இந்த அனுமதியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் தர்ஷன் ஷா. குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க விமானப்படையில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் அமெரிக்க விமானப்படையின் 90வது மருத்துவ தயார் நிலை படைப்பிரிவில் வயோமிங்கில் உள்ள பிரான்சிஸ் இ வாரன் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்து சாஸ்திரங்கள்
இவர் இந்து சாஸ்திரங்களை தீவிரமாக பின்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சிறு வயது முதல் அவர் நெற்றியில் திலகமிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க விமானப்படையில் பணிக்கு சேர்ந்தபோது அவரால் நெற்றியில் திலகமிட்டு பணி செய்ய முடியவில்லை. ஏனென்றால் பணியின்போது மத அடையாளங்களை பின்பற்றக்கூடாது.

2 ஆண்டுக்கு பின் அனுமதி
இதனால் 2020 ஜூன் மாதம் முதல் பயிற்சியில் சேர்ந்தபோதே திலகமிட்டு பணி செய்ய அனுமதிக்கும்படி அவர் உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். பயிற்சி முடியட்டும், விமான தளத்தில் பணிக்கு சேர்ந்த பிறகு அனுமதி கொடுக்கிறோம் என காலம் தாழ்த்தினர். இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. காத்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 22ல் தர்ஷன் ஷாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் நெற்றியில் திலகமிட்டு பணியை தொடர்ந்து வருகிறார்.

நண்பர்கள் வாழ்த்து
இதற்கு தர்ஷன் ஷா விமானப்படைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தர்ஷன் ஷா கூறுகையில், ‛‛தினமும் நெற்றியில் திலகம் இட்டு பணி செய்ய அனுமதி கோரினேன். தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக எனக்கு நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். என்னுடன் பணி செய்பவர்கள் கைக்குலுக்கும் நிலையில் டெக்ஸாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்ஜி, நியூயார்க்கில் உள்ளவர்கள் செல்போன் மெசஜ் மூலம் வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இந்த அனுமதியை பெற நான் போராடியது அவர்களுக்கு நன்கு தெரியும். இதுபோன்ற அனுமதியை இதற்கு முன்பு யாரும் பெறவில்லை என நினைக்கிறேன்.

கற்று கொடுத்த தாத்தா, பாட்டி
விமானப்படையில் பணி செய்வதால் என்னுடைய முக்கிய அடையாளங்களில் ஒன்றான சீருடையைமட்டுமல்லாமல், எனது நெற்றியில் திலகத்தையும் அணிய விரும்பினேன். இது நான் யார் என்பதை வெளிக்காட்டும். எனது தாத்தா, பாட்டி எனக்கு மதம், பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் குறித்து நிறைய கற்று கொடுத்துள்ளனர். அது நேர்மறையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியதாக உறுதியாக கூறுவேன். வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து செல்லலாம் என்ற நம்பிக்கையையும், வழிக்காட்டுதலையும் எனக்கு வழங்குவதாக நம்புகிறேன்.

அமெரிக்கா ஏன் பெரியது
நான் என் மதத்துடன் மட்டுமல்ல என் தொழில் மற்றும் தாய்மொழி குஜராத்தி மீதும் பற்றுடனே இருப்பேன். அமெரிக்கா தனது குடிமக்களின் மத நம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிக்கிறது. இதுதான் அமெரிக்காவை உலக அளவில் பெரிய நாடாக மாற்றியுள்ளது'' என்றார்.

ஹிஜாப் தடை
முன்னதாக கர்நாடக பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் கர்நாடக அரசின் ஹிஜாப் தடை செல்லும் என நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications